கேரள உயர்நீதிமன்றத்தின் தடையை மீறி குருவாயூர் கோயில் வளாகத்தில் மீண்டும் ரீல்ஸ் எடுத்த இளம்பெண்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள கொயிலாண்டி பகுதியை சேர்ந்தவர் ஜஸ்னா சலீம். இவர் குருவாயூர் கிருஷ்ணனின் ஓவியங்களை வரைந்து பிரபலம் ஆனவர். கடந்த வருடம் பிரதமர் மோடி குருவாயூர் வந்தபோது அவரை சந்தித்து, தான் வரைந்த கிருஷ்ணன் ஓவியத்தை வழங்கினார். இந்நிலையில் இவர் குருவாயூர் கோயில் வளாகத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் வைத்து தன்னுடைய பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து குருவாயூர் கோயில் வளாகத்தில் திருமணம் மற்றும் மத நிகழ்ச்சிகளுக்கு அல்லாமல் வேறு எதற்கும் வீடியோ எடுக்கக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த தடை உத்தரவை மீறி ஜஸ்னா சலீம் கடந்த சில மாதங்களுக்கு முன் குருவாயூர் கோயில் வளாகத்தில் இருந்த ஒரு கிருஷ்ணன் சிலைக்கு காகித மாலை அணிவிப்பது போல வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இதைத்தொடர்ந்து அவர் மீது குருவாயூர் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் ஜஸ்னா சலீம் கடந்த சில தினங்களுக்கு முன் மீண்டும் குருவாயூர் கோயில் வளாகத்தில் வைத்து ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இது தொடர்பாக குருவாயூர் கோயில் நிர்வாக அதிகாரி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ஜஸ்னா சலீம் மீது போலீசார் மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.