சிலந்தி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்ட முயற்சி: தடுத்து நிறுத்த கட்சிகள் வேண்டுகோள்
* தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை: காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறி, கேரள அரசு, தேவிகுளம் தாலுகாவில் உள்ள பெருகுடா என்ற இடத்தில், சிலந்தி ஆற்றின் குறுக்கே அணையை கட்டி வருகிறது. இதனால், அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, தமிழக விவசாயிகள் பெரியளவில் பாதிக்கப்படுவர். உடனடியாக, சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை கட்டுமானத்தை தடுத்த நிறுத்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
* பாமக தலைவர் அன்புமணி: சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை கேரள அரசு தொடங்கியுள்ளது. திருப்பூர், கரூர் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் அமராவதி ஆற்றை அழிக்கும் நோக்குடன் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக கேரள அரசை தொடர்பு கொண்டு, நிறுத்தும்படி எச்சரிக்க வேண்டும்.
* தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்ட முயற்சிக்கிறது. இதனால் தமிழக விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுவர். இதனை தமிழக அரசு முக்கியப் பிரச்னையாக கருதி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை பெறுவதில் அக்கறை காட்ட வேண்டும்.