கேரளா கால்பந்து போட்டி: மார்ச்சில் மெஸ்ஸி ஆடுவார்: மாநில அமைச்சர் தகவல்
திருவனந்தபுரம்: கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி, வரும் 2026 மார்ச்சில் கேரளாவுக்கு சுற்றுப்பயணம் செய்து போட்டியில் விளையாடும் என, கேரள மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் அப்துர்ரஹிமான் கூறியுள்ளார். கேரளாவின் மலப்புரத்தில் நேற்று நடந்த, கேரள அரசின் விளையாட்டு தொடர்பான தொலைநோக்குப்பார்வை குறித்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் அப்துர்ரஹிமான் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: அர்ஜென்டினா கால்பந்து விளையாட்டு அணியிடம் இருந்து 2 நாட்களுக்கு முன், இ-மெயில் பெறப்பட்டது. அதில், வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதம் அர்ஜென்டினா அணி கேரளாவுக்கு சுற்றுப்பயணம் செய்து போட்டியில் ஆடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அந்த இ-மெயிலில் கூறப்பட்டிருந்தது. அர்ஜென்டினா கால்பந்து அணி கேரளாவுக்கு வருவதற்கான ஆயத்த வேலைகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன. வருங்காலத்தில் கேரளாவில் பல சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். கொச்சியில் உள்ள ஸ்டேடியத்தில் அர்ஜென்டினா அணி இம்மாதம் விளையாடும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தோம். இருப்பினும், அதற்கான ஒப்புதல்கள் கிடைக்காததால், அந்த போட்டியை நடத்த முடியாமல் போனது. இவ்வாறு அவர் கூறினார்.