கேரள முதல்வர், போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பினார் கேரள நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் வாட்ஸ்அப் மெசேஜ்: நீதிமன்றத்தில் தாக்கல் செய்த போலீஸ் அறிக்கையில் பரபரப்பு தகவல்
திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று நடிகர் திலீப் கேரள முதல்வர், போலீஸ் அதிகாரிகளுக்கு மெசேஜ் அனுப்பிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி இரவில் பிரபல மலையாள நடிகை காரில் செல்லும்போது ஒரு கும்பலால் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகையின் முன்னாள் கார் டிரைவரான சுனில்குமார் உள்பட பலர் கைதானார்கள். பலாத்காரத்திற்கு சதித்திட்டம் தீட்டியது பிரபல மலையாள முன்னணி நடிகர் திலீப் என தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பலாத்கார சம்பவம் நடந்து 5 மாதங்களுக்கு பின்னர் ஜூலை 10ம் தேதி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 85 நாள் சிறைவாசத்திற்கு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த 7 வருடங்களுக்கு மேலாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து வரும் 8ம் தேதி எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் போலீஸ் தாக்கல் செய்துள்ள சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன் விவரம் வருமாறு: கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி இரவில் மலையாள நடிகை ஒரு கும்பலால் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். விசாரணையில் நடிகையை பலாத்காரம் செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியது நடிகர் திலீப் என தெரியவந்தது. 5 மாதங்களுக்குப் பின்னர்தான் இந்த தகவல் கிடைத்தது. ஆனால் சம்பவம் நடந்த 5வது நாளே அதாவது பிப்ரவரி 22ம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சில உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு நடிகர் திலீப் வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில், நடிகை பலாத்கார சம்பவத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. தவறு செய்யாத நான் கடும் மன அழுத்தத்தில் இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில்குமார் கைது செய்யப்பட்ட உடன்தான் இந்த மெசேஜை திலீப் அனுப்பினார். இவர் கைது செய்யப்பட்டதால் தன்னை போலீஸ் நெருங்கும் என்று பயந்து தான் திலீப் இவ்வாறு செய்துள்ளார். இவ்வாறு நீதிமன்றத்தில் போலீஸ் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.