லோக ஐயப்ப சங்கமம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: 'முன்னரே முடிவு செய்த நிகழ்ச்சியால் லோக ஐயப்ப சங்கமத்தில் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை' என லோக ஐயப்ப சங்கமம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கேரள அமைச்சர் வாசவன் அழைப்பு விடுத்திருந்தார்.
கேரளா மாநிலம், பம்பையில் 20.09.2025 அன்று நடைபெறவுள்ள திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழா நிகழ்ச்சியான "லோக அய்யப்ப சங்கமம்” நிகழ்வில் கலந்து கொள்ள கேட்டு, கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளா மாநில துறைமுகம், தேவசம், கூட்டுறவுத் துறை அமைச்சர் வி.என். வாசவன் மூலமாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் வாயிலாக கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தார்.
முதலமைச்சர் , கேரளா மாநில முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முன்னரே முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழாவில் தான் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளது என்றும் இவ்விழாவில், தமிழ்நாடு அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.