கேரளாவில் தொடர்ந்து பாதிப்பு அமீபா மூளைக்காய்ச்சல் பலி 18 ஆக உயர்வு: இந்த மாதத்தில் மட்டும் 7 பேர் உயிரிழப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக அமீபா மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருச்சூர் மாவட்டம் சாவக்காடு பகுதியை சேர்ந்த ரகீம் (59) என்பவர் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்ததில் அவருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பரவியிருந்தது தெரியவந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று ரகீம் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த மாதத்தில் மட்டும் அமீபா மூளைக்காய்ச்சல் பாதித்து பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை அமீபா மூளைக்காய்ச்சல் நோய்க்கு 18 பேர் பலியாகி உள்ளனர்.