சிறுமி பலாத்காரம் விவகாரம்; கேரள நடிகை மினுமுனீர் கைது: திருமங்கலம் போலீசார் அதிரடி
அண்ணாநகர்: சென்னையில் உள்ள விடுதியில் தங்கியிருந்தபோது 4 பேர் சிறுமி பலாத்காரம் செய்த விவகாரம் தொடர்பாக கேரள நடிகை மினுமுனீரை திருமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர். திருமங்கலம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவல்லா பகுதியை சேர்ந்தவர் மினு முனீர் என்கிற மினு குரியன்(52). இவர் கடந்த 2008ம் ஆண்டு கேரளாவில் சின்னத்திரை மூலம் அறிமுகமாகி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மினு முனீர் தனது உறவினர் மகளான 14 வயது சிறுமியை சினிமாவில் நடவடிக்கவைப்பதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். பின்னர் அந்த சிறுமியை கேரளாவில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கவைத்துள்ளார்.
அப்போது அந்த சிறுமியிடம் 4 பேர் தவறாக நடந்துள்ளதாக தெரிகிறது. இதனால் சிறுமி எப்படியோ அங்கிருந்து தப்பித்து கேரளாவுக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்தநிலையில்தான் கேரளா அரசு சார்பில், ஹேமா கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டு திரைப்படத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் பாலியல் தொடர்பான பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் முன்வந்து புகார் கொடுத்தனர். இதுசம்பந்தமாக பாதிக்கப்பட்ட சிறுமியும் கடந்த 2024ம் ஆண்டு கேரளா காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். சிறுமி பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட பகுதி திருமங்கலம் என்பதால் இந்த வழக்கை கேரள போலீசார் திருமங்கலம் போலீசாருக்கு மாற்றினர். இதையடுத்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் நடிகை மீனு முனீர் மீது போக்சோ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், நேற்று திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் கேரளாவுக்கு சென்று நடிகை மினு முனீரை அதிரடியாக கைது செய்தனர். இதன்பின்னர் நடிகையை ரயில் மூலம் இன்று காலை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர். அவரிடம் சிறுமி பாதிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘‘நடிகை மீனு முனீரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன்பின்னர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்’ என்று திருமங்கலம் போலீசார் தெரிவித்துள்ளனர்.