வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரளா மனு
புதுடெல்லி: உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த இருப்பதால் தங்கள் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. கேரளாவில் 941 கிராம பஞ்சாயத்துகள், 152 ஒன்றிய பஞ்சாாயத்துகள், 14 மாவட்ட பஞ்சாயத்துகள், 87 நகராட்சிகள், 6 மாநகராட்சிகள் என 1,200 உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. மொத்தம் 23,612 வார்டுகள் உள்ளன. இதை கருத்தில் கொண்டு கேரள மாநில தேர்தல் ஆணையம், டிச.9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிச.13-ம் தேதியும், தேர்தல் முடியும் கடைசி தேதி டிச.18-ம் தேதி என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே இந்திய தேர்தல் ஆணையம் நவ.4 முதல் டிச.4 வரை வீடு வீடாகச் சென்று சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த இருப்பதால் தங்கள் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், "மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மற்றும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் என இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்வது அரசுப் பணியாளர்களை சோர்வடையச் செய்யும். அதோடு, அரசாங்கத்தின் தினசரி பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் இல்லாத நிலை உருவாகும். இதனால், நிர்வாகம் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகும். இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. எனவே, சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதை ஒத்திவைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.