கேரளாவில் மாணவி ஹிஜாப் அணிய அனுமதிக்குமாறு பள்ளி நிர்வாகத்துக்கு கல்வி அமைச்சர் சிவன்குட்டி உத்தரவு!!
திருவனந்தபுரம்: கேரளாவில் மாணவி ஹிஜாப் அணிய அனுமதிக்குமாறு பள்ளி நிர்வாகத்துக்கு கல்வி அமைச்சர் சிவன்குட்டி உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பள்ளுருத்தியில் கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில், சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், 100க்கும் மேற்பட்டோர் இஸ்லாம் மதத்தினரைச் சார்ந்த மாணவர்கள் என சொல்லப்படுகிறது.
இருந்தபோதிலும், அந்தப் பள்ளியில் ஹிஜாப் அணிய தடை இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் 8ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி ஹிஜாப் அணிந்து வந்தார். ஆனால் சீருடை அணிந்து வந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று கூறி பள்ளியில் நுழைய அந்த மாணவிக்கு தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த கம்யூனிஸ்ட், எஸ்டிபிஐ கட்சியினர் பள்ளி முன் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து நேற்று பள்ளி நிர்வாகிகளுடன் மாணவியின் பெற்றோர், எர்ணாகுளம் எம்பி ஹைபி ஈடன் மற்றும் பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பள்ளியின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர். இது பற்றி விசாரணைக்கு உத்தரவிட்ட கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தனியார் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், எர்ணாகுளம் அருகே உள்ள கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளியில், இஸ்லாமிய மாணவியை ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வர அனுமதிக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு அமைச்சர் சிவன்குட்டி உத்தரவிட்டுள்ளார். மாணவி ஹிஜாப் அணிய பள்ளி தடை விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மத உரிமைகள் மற்றும் RTE சட்டத்தை சுட்டிக்காட்டி, தடையை நீக்க கல்வி அமைச்சர் சிவன்குட்டி உத்தரவிட்டார்.