கேரளாவில் பலத்த மழை 140 அடியை நோக்கி முல்லைப் பெரியாறு அணை
திருவனந்தபுரம்: கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கடந்த சில தினங்களாக திருவனந்தபுரம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏராளமான வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இந்தநிலையில் நேற்று கல்லார், கூட்டார், நெடுங்கண்டம், தூவல் உள்பட பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. நெடுங்கண்டம் பகுதியில் சாலைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு வேன் உள்பட பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
மத்தன்கடை பகுதியில் நேற்று நள்ளிரவு கடையை மூடிவிட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த தாமஸ் (66) என்பவர் சாலையில் குவிந்து கிடந்த மணல்மேட்டில் மோதி உயிரிழந்தார். இதற்கிடையே தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
அதன்படி இன்று காலை 5 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 139.30 அடியாக இருந்தது. இதனால் அணையின் 13 மதகுகளும் ஒன்றரை மீட்டர் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே கேரளாவில் மேலும் 5 நாள் மழை நீடிக்கும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. திருவனந்தபுரம், பாலக்காடு, இடுக்கி, பத்தனம்திட்டா உள்பட 8 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.