கேரளாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்: டிசம்பர் 9, 11 தேதிகளில் நடைபெறுகிறது
திருவனந்தபுரம்: கேரளாவில் 1199 உள்ளாட்சி அமைப்புகளுக்கான காலாவதி அடுத்த மாதம் நிறைவடைகிறது. இந்நிலையில் கேரள மாநில தலைமை தேர்தல் ஆணையாளர் ஷாஜகான் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 9ம் தேதியும், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 11ம் தேதியும் தேர்தல் நடைபெறும்.
நவம்பர் 14ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாள் நவம்பர் 21ம் தேதி ஆகும். வேட்பு மனுக்கள் பரிசீலனை நவம்பர் 22ம் தேதியாகும். நவம்பர் 24ம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாகும். டிசம்பர் 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் நடைமுறை சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இடது முன்னணி வேட்பாளர்கள் அறிவிப்பு;
திருவனந்தபுரம் மாநகராட்சி தற்போது இடதுசாரி கூட்டணயிடம் உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வருவதற்கு முன்பே திருவனந்தபுரம் மாநகராட்சியில் காங்கிரஸ் மற்றும் பாஜ கூட்டணி சார்பில் போட்டியிடும் சில முக்கிய வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. பாஜ கூட்டணி சார்பில் 67 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதில் கேரளாவின் முதல் பெண் டிஜிபியான ஸ்ரீலேகா மற்றும் முன்னாள் இந்திய தடகள வீராங்கனை பத்மினி தாமஸ் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.இதற்குப் பின்னர் 48 வேட்பாளர்கள் அடங்கிய காங்கிரஸ் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று 93 பேர் அடங்கிய இடதுசாரி கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில் தற்போதைய மேயர் ஆர்யா ராஜேந்திரனின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.