கேரளாவில் இந்து பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமியருக்கு குவியும் பாராட்டு..!!
திருவனந்தபுரம்: கேரளாவில் இந்து பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. திருவனந்தபுரம் கடினம்குளம் மறுவாழ்வு மையத்தில் சத்தீஸ்கரை சேர்ந்த 44 வயது பெண் இருந்து வந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட ராக்கி இருந்து வந்த மறுவாழ்வு மையம், கன்னியாஸ்திரிகளால் நடத்தப்பட்டு வந்தது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ராக்கி, தான் இறந்த பின், இந்து வழக்கப்படி இறுதிச் சடங்கு நடத்த கோரியுள்ளார். கடினம்குளம் பஞ்சாயத்து உறுப்பினர் சஃபீர் என்பவரை கன்னியாஸ்திரிகள் அணுகி உள்ளனர்.
2 வாரங்களுக்கு முன் மறுவாழ்வு மையத்தில் இறந்த ராக்கியின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அவருக்கு இந்து முறைப்படி இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. இதனை இஸ்லாமியரான சஃபீர், தானே முன்வந்து இந்து முறைப்படி செய்தார். இஸ்லாமியரான சஃபீரின் செயலை உள்ளூர் ஜமாத் அமைப்பு, கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர். இந்து பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு இஸ்லாம் மதம் எனக்கு தடையாக இருக்கவில்லை எனவும் சஃபீர் தெரிவித்தார்.