கெங்கவல்லி அருகே டிராக்டருடன் 80 அடி கிணற்றில் விழுந்த விவசாயி
கெங்கவல்லி : கெங்கவல்லி அருகே நிலத்தை உழுவதற்காக எடுத்தபோது, டிராக்ருடன் விவசாயி கிணற்றில் விழுந்தார். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்டதால், காயங்களுடன் விவசாயி தப்பினார்.கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட மாருதி நகரில், ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தை முருகேசன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில், நிலத்தில் பயிர் செய்வதற்காக விவசாய பணியில் முருகேசன் ஈடுபட்டிருந்தார். கிணற்றின் அருகில் இருந்த டிராக்டரை ஏர் உழுவதற்கு முன்பாக, கலப்பையை மாற்றுவதற்காக இயக்கியுள்ளார். அப்போது, ரிவர்ஸ் கியரில் இருந்த டிராக்டர் பின் பக்கமாகவே இழுத்துச் சென்று, அங்கிருந்த 80 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தது.
கிணற்றில் 40 அடிக்கு தண்ணீர் இருந்த நிலையில், முருகேசன் டிராக்டரோடு கிணற்றில் விழுந்தார். இதை பார்த்த அவரது மனைவி சத்தம் போடவே, அருகிலிருந்தவர்கள் ஓடிவந்தனர். இது குறித்த தகவலின் பேரில், ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கிணற்றில் இருந்த முருகேசனை உயிருடன் மீட்டனர்.
காயமடைந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து, கிரேன் உதவியுடன் 2 மணி நேரம் போராடி, டிராக்டரை மீட்டனர். ஏர் உழுவதற்காக டிராக்டரை இயக்கிய போது, கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.