கீழக்கரை அருகே 2 கார்கள் மோதல் ஐயப்ப பக்தர்கள் உட்பட 5 பேர் பலி: 7 பேர் படுகாயம்
கீழக்கரை: கீழக்கரை அருகே நின்ற கார் மீது, மற்றொரு கார் மோதிய விபத்தில் ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ராமச்சந்திர ராவ் (55), அப்பால நாயுடு (40), பண்டார சந்திரராவ் (42), ராமர் (45), ராம்(40) ஆகியோர் சபரிமலைக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டு வந்தனர்.
முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய முடிவு செய்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் கீழக்கரை அருகே, கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கார் டிரைவருக்கு தூக்கம் வந்ததால், கும்பிடுமதுரை என்ற இடத்தில் ஒரு ஓட்டல் அருகே நிறுத்தி காரிலேயே தூங்கியுள்ளனர். அப்போது 7 பேர் காரில் ஏர்வாடிக்கு சென்றுவிட்டு, கீழக்கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
இந்த கார் ஓட்டல் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஐயப்ப பக்தர்களின் காரின் பின்பகுதியில், பயங்கரமாக மோதியது. இதில் கீழக்கரை சென்ற காரில் இருந்த டிரைவர் முஷ்டாக் அகமது (30), ஐயப்ப பக்தர்கள் காரில் இருந்த ராமச்சந்திர ராவ், அப்பால நாயுடு, பண்டார சந்திரராவ் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஐயப்ப பக்தர்கள் காரில் இருந்த ராமர், ராம் ஆகியோர் மற்றும் கீழக்கரை காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து வந்த கீழக்கரை போலீசார், ஏர்வாடி தீயணைப்பு படை வீரர்கள், பொதுமக்கள் உதவியுடன் கார் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த 8 பேரையும் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆந்திராவைச் சேர்ந்த ராமர் உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. மற்ற 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், கீழக்கரை காரில் இருந்த அஷரத் அலி (28) மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
* முதல் நாள் பிறந்தநாள் மறுநாள் இறந்த நாள்
முதற்கட்ட விசாரணையில், கீழக்கரை காரின் டிரைவர் முஷ்டாக் அகமதுவுக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள். இதை கொண்டாடுவதற்காக முஷ்டாக் அகமது, அஷரத் அலி உள்பட 7 பேர் ஏர்வாடிக்கு சென்றுவிட்டு, நேற்று அதிகாலை 3 மணியளவில் காரில் வேகமாக வந்துள்ளனர். அப்போது நின்றிருந்த ஐயப்ப பக்தர்களின் கார் மீது மோதி முஷ்டாக் அகமது உள்பட 5 பேர் இறந்தது தெரிய வந்துள்ளது.