கீழடியை மகாபாரதத்தோடு தொடர்புபடுத்துவதா? சரஸ்வதி நதி என்பதே கிடையாது அதற்காக பல நூறு கோடி செலவு
* அகழாய்வு அறிக்கையை மேற்கொண்டவரே தயாரிக்க முடியும், தொல்லியல் இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா பரபரப்பு பேச்சு
மதுரை: சரஸ்வதி நதி என்பதே கிடையாது. அதற்கு பல நூறு கோடி ரூபாய் செலவிடப்படுகிறது என அமர்நாத் ராமகிருஷ்ணா கூறியுள்ளார். சிந்துவெளி நாகரிகம் உலகிற்கு அறிவிக்கப்பட்டதன் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, தமுஎகச சார்பில் நேற்று மதுரையில் கருத்தரங்கம் நடந்தது. தொல்லியல்துறை இயக்குனர் அமர்நாத் ராமகிருஷ்ணா, சிந்துவௌி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில், ‘தோண்டியும் தோண்டாததும்’ எனும் தலைப்பில் அமர்நாத் ராமகிருஷ்ணா பேசியதாவது: நாகரிகங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. கடவுள் எந்த நாகரிகத்தையும் படைக்கவில்லை. அப்படி மனிதர்கள் உருவாக்கிய நாகரிகத்தை, புனைவுகளால் கட்டமைத்து கதைகளை வரலாறாக மாற்றுகிறார்கள். வரலாறு என்பது ஆதாரங்களின் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட வேண்டும். ஆதிச்சநல்லூர், காஞ்சிபுரத்தில் அகழாய்வு குறித்த செய்திகள் முழுமையாக வௌியிடப்படவில்லை.
சங்க இலக்கியம் இந்திய துணை கண்டத்தை பற்றி எழுதிய ஒரே இலக்கியம் என்ற பெருமையை கொண்டது. சரஸ்வதி நதி என்பதே கிடையாது. அதற்கு பலநூறு கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. கீழடி தொடர்பான எனது இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அதற்கு முன்பாக அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறையைச் சார்ந்த சில ஆய்வு மாணவர்கள் ‘மணலூர் கீழடி மகாபாரதம்’ என கீழடியோடு, மகாபாரதத்தை தொடர்புபடுத்தி ஒரு கட்டுரையை எழுதிவிட்டார்கள்.
கீழடி அகழாய்வு அறிக்கை இதுவரை வெளியாகவில்லை. அதில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்று கூட யாருக்கும் தெரியாது. அப்படி இருக்கும் சூழலில், அதற்கு முன்னால் ஒரு புனைவு கட்டமைக்கப்படுகிறது என்பதைதான், நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். இதை கண்டிப்பாக நாம் முறியடிக்க வேண்டும். மகாபாரதத்திற்கும் கீழடிக்கும் என்ன தொடர்பு? அவ்விடத்தை தோண்டி அகழாய்வு செய்த நான் சொல்கிறேன். எனக்கே அது தெரியவில்லை.
கிபி 13ம் நூற்றாண்டில் கீழடி அருகே கொந்தகையில் கிடைத்த குந்தி தேவி சதுர்வேதி மங்கலம் என்ற குறிப்பினை வைத்து மகாபாரதத்தோடு தொடர்புபடுத்த முயல்கிறார்கள். வரலாற்றை ஆதாரப்பூர்வமாக பார்க்கின்ற செயல்பாடு இங்கு இல்லை. வரலாறு என்பது இங்கு புனைவாக தான் உள்ளது. தொல்லியல் சான்றுகளை வைத்து அவ்வாறு செய்ய முடியாது. தொல்லியல் ஆதாரங்கள் அனைத்தும் புனைவுகளுக்கு மாறாகத்தான் இருக்கும்.
ஆனால் மாறாக நமது சங்க இலக்கியங்கள் அனைத்தும் மனித வாழ்வியலை பதிவு செய்தவை. இது தான் மற்ற இலக்கியங்களுக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் உள்ள வேறுபாடு. அதில் புனைவுகள் கிடையாது. மக்களை பற்றியும், மக்கள் வாழ்வியலை பற்றியும், மனிதத்தை பற்றியும், பேசுகின்ற இலக்கியங்களை தவிர எந்த மதத்தைப் பற்றியும், மத கருத்துக்களை பற்றியும் எந்த திணிப்பையும் செய்யவில்லை.
தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அகழாய்வு அறிக்கை என்பது அதை மேற்கொண்டவரால் தான் எழுதப்பட வேண்டும், வெளியிடப்பட வேண்டும். அறிக்கை கொடுத்த வரை விமர்சனம் செய்யலாம். அதிலொன்றும் தவறில்லை. ஆனால் நான் கொடுத்த அறிக்கை சரி இல்லை என்று ஆய்வே மேற்கொள்ளாத ஒருவர் எப்படி சொல்ல முடியும்? என்பது தான் என்னுடைய கேள்வி. இவ்வாறு கூறினார்.