காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்
காட்டுமன்னார்கோவில் : கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் -சிதம்பரம் சாலையில் உள்ள தைக்கால் பகுதியில் பொட்டகுளம் என்ற குளத்தை சுற்றியுள்ள நீர்நிலை கடந்த 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள் மற்றும் கடைகள், மீன் மார்க்கெட் கட்டப்பட்டன.
இந்நிலையில் நீர்நிலைகளில் அத்துமீறி கட்டியிருக்கும் குடியிருப்புகள், வணிக கட்டிடங்களை காலி செய்ய உரிமையாளர்களுக்கு பல முறை வருவாய் துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றம் செய்யும்படி மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.இதன்படி அந்த பகுதிகளில் தாசில்தார் பிரகாஷ், பேரூராட்சி செயல் அலுவலர் தங்கவேல் தலைமையில் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.
இதில் வருவாய் துறையினர், பேரூராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றும் பணியை தொடங்கினர். ஒரு சுற்றுச்சுவரை இடித்த நிலையில், வருவாய்த் துறை அதிகாரிகளை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள் அவர்களிடம் பல ஆண்டுகளாக வசித்து வரும் வீடுகளை இடித்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், வீடுகளை இடிக்கக் கூடாது எனவும் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள் தற்போது வீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்துச் செல்ல அவகாசம் கொடுத்தனர்.
இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கும்போது தனிநபர் ஒருவர் வணிக கட்டிடங்களை இடிக்கக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் போது பதற்றம் ஏதும் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.