காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் பலி: மேலும் 2 பேர் காயம்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர். காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் அகல் பகுதியில் உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த உளவுத்தகவல்களைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 1ம் தேதி தொடங்கிய இந்த தேடுதல் வேட்டை 9வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. சமீபத்திய ஆண்டுகளில் நடந்த நீண்ட தேடுதல் வேட்டை இதுவாகும். இந்நிலையில், நேற்று முன்தினம் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர். இது குறித்து ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் தனது எக்ஸ் தளத்தில், ‘‘ராணுவ வீரர்கள் பிரித்பால் சிங் மற்றும் ஹர்மிந்தர் சிங் ஆகியோரின் உயர்ந்த தியாகத்திற்கு சினார் கார்ப்ஸ் மதிப்பளிக்கிறது.
அவர்களின் தைரியமும், அர்ப்பணிப்பும் என்றென்றும் எங்களுக்கு ஊக்கமளிக்கும்’’ என தெரிவித்துள்ளது.
இந்த சண்டையில் மேலும் 2 வீரர் காயமடைந்துள்ளனர். இதுவரை காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது உறுதிபடுத்தப்படவில்லை. வனப்பகுதியில் தீவிரவாதிகளை கண்டுபிடிக்க டிரோன்கள், ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.