கருவில்பாறை வலசு குளத்தை சூழ்ந்த ஆகாயத்தாமரைகள்
ஈரோடு : ஈரோடு அடுத்த கருவில்பாறை வலசு குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாநகராட்சி 10வது வார்டுக்குட்பட்ட கருவில்பாறை வலசு பகுதியில், 26.65 ஏக்கரில் குளம் அமைந்துள்ளது. இக்குளத்தின் மூலம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு நிலத்தடி நீராதரமாக உள்ளது. இதன் மூலம், விவசாயிகள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் தண்ணீரே தெரியாதப்படி வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால், குளத்தின் சுற்றுச்சூழல் சமநிலையும், நீர்வரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
நீரின் தரம் குறைந்து, மீன் வளங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதோடு, நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.இவை தவிர, ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளதால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாமல் தடைப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, கருவில்பாறை வலசு குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, நீர் வழிப்பாதை மறித்து, விளையாட்டு மைதானம் போல் காட்சியளிக்கும் ஆகாயத்தாமரை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.