கரூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதா?: தேர்தல் ஆணையம் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கரூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கரூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்களையும், போலி வாக்காளர்களின் பெயர்களையும் நீக்குமாறு உத்தரவிடக்கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், போலி வாக்காளர்களையும், இறந்த வாக்காளர்களின் பெயர்களையும் பட்டியலில் இருந்து நீக்காவிட்டால் அது தேர்தல் முடிவுகளில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். கள்ள ஓட்டு போடுவதற்கு வழிவகை செய்யும்.
வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டியது வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகளின் கடமை என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கரூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களும், இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களும் மட்டுமல்லாமல், ஒரு வாக்காளரின் பெயர் மூன்று முறை இடம்பெற்றுள்ளது. இதுசம்பந்தமாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளோம் என்று வாதிட்டார்.
அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்னாள் அமைச்சரின் புகார் குறித்து கள ஆய்வு நடத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மனுதாரருக்கு விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கரூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனவா, இடம்பெயர்ந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.