கரூரில் பலியானவர்கள் எண்ணிக்கை 41 ஆக உயர்வு; கூட்டத்தை கூட்ட விஜய் செய்த சதியே நெரிசல் ஏற்பட காரணம்: புதிய தகவல்கள் அம்பலம்
திருச்சி: கரூரில் விஜய் பிரசாரத்தில் நெரிசல் ஏற்பட்டு பலியானவர்கள் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. கூட்டத்தை கூட்டுவதற்காக விஜய் செய்த சதியே நெரிசல் ஏற்பட காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம்தேதி இரவு நடந்த தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். மேலும், அரசு மருத்துவமனையில் 50 பேரும், தனியார் மருத்துவமனையில் 60 பேர் என 110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 30 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை வேலுசாமிபுரத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுகுணா (55) உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் சோக அலைகளை ஏற்படுத்தி விட்ட இந்த சம்பவம் குறித்து தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. பிற்பகல் 12 மணிக்கு கரூரில் விஜய் பேசுவார் என அறிவிக்கப்பட்டது. இதனால் காலை 10 மணியில் இருந்தே ரசிகர்கள் கூட ஆரம்பித்தனர். ஆனால் விஜய் பிரசார இடத்துக்கு வந்த போது இரவு 7.15 மணி. பிரசாரம் நடந்த இடத்துக்கு முன்னதாக திருக்காம்புலியூரில் ரசிகர்கள் சாலையின் இருபுறமும் காத்திருந்தனர். அப்போது விஜய் ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்காமல் பிரசார சொகுசு வாகனத்தின் உள்ளே சென்று விட்டார். இதனால் சாலையோரம் நின்றவர்கள், விஜய்யை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
இவர்கள் விஜய்யை பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் அவரது வாகனத்தின் பின்னால் படையெடுக்க பிரசார இடத்தில் தள்ளுமுள்ளு அதிகரிக்க ஒரு காரணம். விஜய் ஜன்னலோரம் அமர்ந்து கையசைத்திருந்தால், அந்த கூட்டம் அப்படியே திரும்பி இருக்க வாய்ப்புண்டு. எனவே கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதற்காக விஜய் திட்டமிட்டே பஸ்சுக்குள் சென்று விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.அதேபோல் கூட்டத்தை கூட்ட விஜய் திட்டமிட்டதற்கு இன்னொரு உதாரணம். விஜய்யின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் பேசுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் விஜய் 8.45 மணிக்கு தான் சென்னை விமான நிலையத்தில் இருந்தே புறப்பட்டார். எனவே விஜய் கூட்டத்தை கூட்ட திட்டமிட்டே இவ்வாறு செய்ததாக சமூகவலை தளங்களில் தற்போது தகவல் பரவி வருகிறது.
அதேபோல் கரூரில் விஜய் வாகனம் ஒதுக்கப்பட்ட பிரசாரம் நடந்த இடத்துக்கு வந்த போது, ரசிகர்கள் ஒதுங்க வழியில்லை. அவ்வளவு கூட்ட நெரிசல். எல்லா இடத்திலும் விஜய்யின் பிரசார வாகனத்துக்கு அருகிலேயே கன்சோல் ரூம் அமைக்கப்படும். இந்த ரூமில் ஜெனரேட்டர் உள்ளிட்ட சில வசதிகள் இருக்கும். இங்கிருந்து தான் விஜய்யின் பிரசார வாகனத்துக்கு கரன்ட் செல்லும். அதில் இருந்து மைக் இயங்கும். பிரசார வாகனத்துக்கு வழிவிட ஏராளமான ரசிகர்கள் கன்சோல் ரூமுக்குள் நுழைந்தனர். இதனால் அந்த ரூமை சுற்றி அடைக்கப்பட்டிருந்த தகர சீட்கள் உடைத்து எறியப்பட்டன. இதனால் தான் ஆரம்பத்தில் விஜய் மைக் சிறிது நேரம் வேலை செய்யவில்லை. இதன் பின் மைக்கை சரி செய்தனர்.
ஆரம்பத்தில் விஜய் பேசிய போது, மைக் வேலை செய்யாததால், அவரது பேச்சை கேட்க பலரும் பிரசார வாகனத்தை நோக்கி முண்டியடித்து செல்ல முயன்றனர். அப்போது சிலர் கீழே தவறி விழுந்தனர். கிட்டத்தட்ட 10 மணி நேரத்துக்கு மேல் தண்ணீரின்றி, உணவின்றி சோர்வாக இருந்த ரசிகர்கள் மயக்கத்தில் கீழே விழுந்து கால்களில் மிதிபட்டனர். இதனால் தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டவர்களில் 30க்கும் மேற்பட்டோர் இறந்தே வந்துள்ளனர். விஜய் பேச துவங்கியதுமே பலர் இறந்து விட்டனர். இந்த தகவல் அறிந்து பிரசார வாகனத்துக்குள் இருந்த ஆதவ் அர்ஜுனா உடனே மேலே வந்து பேச்சை விரைந்து முடிக்குமாறு விஜய்யிடம் கேட்டுக்கொண்டார். அதன்பிறகு விஜய் நிலைமையை உணர்ந்து தனது பேச்சை வேகமாக முடித்தார்.
அப்போது பலர் இறந்து விட்ட செய்தி விஜய்க்கும் தெரியவந்திருக்கிறது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் அவர் அங்கிருந்து திருச்சிக்கு புறப்பட்டு சென்று விட்டார். விஜய் எப்போதும் தனது ரசிகர்களை நண்பா, நண்பி, தோழா, தோழி என அழைப்பார். ஆனால் இவரது பிரசார கூட்டத்தில் அந்த ரசிகர்கள் இறந்ததை அறிந்தும் விஜய் திருச்சி சென்று தனிவிமானத்தில் சென்னை சென்றிருக்க வேண்டுமா? களத்தில் இருந்து முதலுதவி சிகிச்சைக்கான வேலைகளை முடுக்கி விட்டிருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியிருக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கடுமையான கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.
இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், விஜய் சினிமாவில் ஹீரோ. மக்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் எதிரிகளுடன் சண்டை போட்டு காப்பாற்றுவார். நிஜத்தில் அவ்வாறு செய்ய முடியாது. ரியல் ஹீரோவாக இருந்திருந்தால் பிரசார வாகனத்தில் இருந்து குதித்து நெரிசலில் சிக்கிய ரசிகர்களை அவர் காப்பாற்றி இருக்க வேண்டும். ஆனால் அவர் எந்த பாதிப்பும் இன்றி ஷேப்டியாக தனி விமானத்தில் சென்னை சென்று விட்டார். இதை முதலில் அவரது ரசிகர்கள் உணர வேண்டும். சினிமா மோகத்தில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும். சினிமா மோகத்தால் தான் 41 உயிர்கள் பறிபோய் உள்ளதாக ஆதங்கத்துடன் கூறினர்.
கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்;
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மக்கள் கலை இலக்கிய கழக திருச்சி மாவட்ட செயலாளர் ஜீவா கலெக்டர் சரவணனிடம் அளித்த மனுவில், கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்துள்ளனர். 41 பேர் உயிர் பலிக்கு காரணமான தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி, சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக விஜய்யை கைது செய்யக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விபத்து இங்கே!... விஜய் எங்கே? பதாகைகளுடன் மவுன ஊர்வலம்;
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த அடுத்த ஆலங்குடியில், விஜய் கூட்டத்தில் பலியான 41 பேருக்கு பொதுமக்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக ஆலங்குடி பூந்தோட்டம் சாலை இணைப்பு முதல் கும்பகோணம்- மன்னார்குடி சாலை ஆர்ச் வரை பொதுமக்கள் மவுன ஊர்வலம் நடத்தினர். விபத்து இங்கே!... விஜய் எங்கே?... என்ற பதாகைகளை பொதுமக்கள் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி சென்றனர். பின்னர் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி கண்டன போஸ்டர்;
கரூர் தான்தோணிமலை, காந்திகிராமம், தெரசா கார்னர், வேலுச்சாமிபுரம், அரசு மருத்துவமனை அருகில், ஈரோடு மற்றும் கோவை ரோடு, பிரேம் மகால் பகுதி உள்பட மாவட்டம் முழுவதும் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் தமிழக அரசே, 39 அப்பாவி உயர்களை பலி வாங்கி, தப்பி ஓடிய விஜய் என்கிற அரசியல் தற்குறியை கொலைக்குற்றவாளியை கைது செய் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர்கள் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘விஜய் அறிவித்த 9 வயது சிறுமி எங்க பாப்பாதான் மேடம்’ தந்தை நீதிபதியிடம் கண்ணீர்;
விஜய் பிரசார கூட்டத்திற்கு சென்று மனைவி பிரியதர்ஷிணி, மகள் தாரணிகாவை இழந்த ஏமூர் புதூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல், ஒரு நபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசனிடம் கூறும்போது, விஜய் கூட்டம் முடிக்கும் போது, அவரிடமே சிறுமி காணாமல் போனது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும் சிறுமியின் பெயரைக்கூறி, சிறுமியை கண்டுபிடித்து தரும்படி கூறியுள்ளார். அந்தளவிற்கு மேடை வரை செய்தி சென்றுள்ளது. இதே ஊர்க்காரர்கள் 15 பேர் ஒன்றாக சேர்ந்துதான் சென்றுள்ளனர். கட்சிப்புடவைகள் கட்டித்தான் அனைவரும் சென்றனர். ஒரு டெம்போ வேனில் ஏறி சென்றனர். 15 பேருக்கு மேல் சென்றதில் 5 பேர் பலியாகிவிட்டனர் என்றார். குழந்தை காணவில்லை என்ற செய்தி விஜய் வரை சென்றுள்ளது என்றால், அவரது தாய் அருகில் தான் இருந்திருக்க வேண்டும். எப்படி அவரும் இறந்திருக்கிறார்? கட்சிக்காரர்கள் அழைத்து சென்றால், பத்திரமாக திரும்ப கொண்டு வந்து விட்டிருக்க வேண்டாமா? இதுகுறித்து மேல் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.