கரூர் பேரிடரின் மூலம் துன்பம் வருகின்றபோது மக்களை கைவிட்டவர் விஜய் காப்பாற்றியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்தான்: தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல உலகுக்கே உணர்த்திவிட்டது
சென்னை: கரூர் பேரிடரின் மூலம், துன்பம் வருகின்றபோது, தமிழக மக்களை கைவிடுவோர் யார், காப்பவர் யார்? காப்பவர் நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல உலகுக்கே உணர்த்திவிட்டது. கரூரில் மனிதர்களால் இழைக்கப்பட்ட பேரவலம் நிகழ்ந்து, 41 பேர் உயிரிழந்தார்கள் எனும் கொடிய செய்தி வரத் தொடங்கிய நேரத்திலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலைமைச்செயலகம் வந்தார். அதிகாரிகளை அழைத்து, ஆலோசனைகள் நடத்தினார்.
அங்கு இருந்தபடியே, மாவட்ட ஆட்சியருக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும், மற்றவர்களுக்கும் உடனடி நடவடிக்கைகள் எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்திட வேண்டும் என உத்தரவுகள் பிறப்பித்த வண்ணம் செயல்பட தொடங்கினார். உயிரிழந்தவர்கள் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கிட ஆணை பிறப்பித்தார்.
நேரே சென்னை விமான நிலையம் சென்று, விமானத்தின் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றார். அங்கு இருந்தபடியே கரூர் விரைந்து மருத்துவமனையில் இருந்த உயிரற்றவர்களின் உடல்களை பார்த்து கண்ணீர் வடித்தார். மலர் வலையங்கள் வைத்து, அங்கே கூடி இருந்த உற்றார் உறவினர்களுக்கு எல்லாம் ஆறுதல் கூறினார். யாருக்காக கரூருக்கு வந்தோமோ, அவரோ, அவரை சார்ந்தவர்களோ நம்மைத் தேடி வந்து பார்த்து, அவலம் கண்டு ஆறுதல் கூற வரவில்லை.
ஆனால், யாரை நாம் எதிர்பார்க்கவில்லையோ, தவறாகச் சொன்னவர்கள் சொல் கேட்டு யாரை இழித்தும் பழித்தும் திட்டிக் கொண்டும் காலத்தை வீணாக்கினோமோ அவரல்லவா ஓடோடி வந்து நம்மைத் தேடி தேடி பார்த்து ஒவ்வொருவர் துன்பத்தையும் துடைத்துக் கொண்டிருக்கிறார் என, உடல்படும் வேதனைகளுடனும் உள்ளம் வருந்தும் துன்பங்களுடனும் துடித்துக் கொண்டிருந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறி அரவணைத்துக் கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டவுடன் நெஞ்சும் கரங்களும் ஒன்றாகி வணங்கிய காட்சிகளை தொலைக்காட்சிகள் மூலம் தமிழ்நாட்டு மக்கள் கண்டு;
‘இவரல்லாவா முதலமைச்சர்!, இவரல்லாவா முதலமைச்சர்!’ என்று மக்கள் பேசி பாராட்ட தொடங்கினர். இன்றும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். சந்தக்கவி வாணர் அருணகிரி நாதர் பாடிய கந்தர் அலங்காரத்தில் முருகப் பெருமானை பாடும் பொழுது, ‘முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்போன்’ என்று பாடுவார். அதுபோல கரூர் நிகழ்ச்சி தவறான வழிகாட்டுதல் மூலம் உண்மை அறியாமல் முதல்வரை குறை சொல்லி அதுவரை வைது கொண்டிருந்தவர்கள் கூட, இன்று வாயார மனதார வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அது அருணகிரிநாதர் பாடியருளிய வரிகளையே நமக்கு நினைவுபடுத்துகின்றது.
அதுமட்டுமல்ல! கரூர் சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் (3ம் தேதி) சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ஒரு வழக்கின் விசாரணையின்போது நீதிபதி, கரூர் சம்பவத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டார். அத்துடன், தமக்காக வந்து பலியானவர்களை பார்க்காமல் ஓடிவிட்ட நடிகர் தலைமைப் பண்பு இல்லாதவர் என்று கூறி கடும் கண்டனம் தெரிவித்தார்.
‘‘பெண்கள், குழந்தைகள் பலியான நிலையில் கட்சி தொண்டர்களை, ரசிகர்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டுவிட்டு ஓடிய தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தலைமை பண்பு இல்லை; அவர்கள் சம்பவத்துக்கு பொறுப்பேற்கவும் இல்லை. கரூர் விபத்து மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. கோர்ட் இதை கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அவர்கள் தமது பொறுப்பை தட்டிக்கழிக்கவும் முடியாது” என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்த கொடிய சம்பவம் தமிழ்ச் சமுதாயத்திற்கு உழைப்பவர் யார், தமிழ்ச் சமுதாயத்தை தமக்காக தவறான வழியில் அழைத்துச் செல்பவர்கள் யார் யார் என அடையாளம் காட்டிவிட்டது. இந்திய திருநாட்டில், தம்முடைய அயராத உழைப்பால் ஒவ்வொரு நாளும் பாடுபட்டு, புதிய புதிய திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி தமிழ்நாட்டை ‘இந்திய அளவில் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு தமிழ்நாடு’ எனும் புகழை நிலைநாட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாட்டு மக்கள் மனதார பாராட்டி, வாழ்க வாழ்க என வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
திருவள்ளுவர் தம் திருக்குறளில், ‘‘கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்” - என்று கூறுவார். அதாவது, தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. அந்த தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது என்று கலைஞர் இந்த குறளுக்கு உரை வகுத்துள்ளார். இந்த திருக்குறள், கரூர் பேரிடரின் மூலம், துன்பம் வருகின்றபோது, நம்மை கைவிடுவோர் யார்? நம்மை காப்பவர் யார்? காப்பவர் நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல உலகுக்கே உணர்த்திவிட்டது.
* ‘‘இந்த கொடிய சம்பவம் தமிழ்ச் சமுதாயத்திற்கு உழைப்பவர் யார், தமிழ்ச் சமுதாயத்தை தமக்காக தவறான வழியில் அழைத்துச் செல்பவர்கள் யார் யார் என அடையாளம் காட்டிவிட்டது.