கரூர் துயரச் சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பை விஜய் ஏற்றிருக்க வேண்டும்: டிடிவி தினகரன் பேட்டி
தஞ்சை: கரூர் துயரச் சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பை விஜய் ஏற்றிருக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்; கரூர் துயரம் பற்றி பதவி வெறியில் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். விஜய் தார்மீக பொறுப்பேற்றிருந்தால் நீதிமன்றம் கண்டித்திருக்காது. உணர்ச்சிவசப்பட்டு பேசும் சீமான் கூட நிதானமாக பேசுகிறார்; ஆனால் பதவி வெறியில் பேசுகிறார் பழனிசாமி. கரூர் துயரச் சம்பவத்தில் முதலமைச்சர் கூட உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.
கரூர் துயர சம்பவத்தில் தனது நீண்ட அனுபவம் காரணமாக மிகவும் நிதானமாக கையாள்கிறார் முதல்வர. கரூர் விவகாரத்தில் அரசும், முதலமைச்சரும் பொறுப்பாகவும் சரியாகவும் செயல்படுகிறது. ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதுபோல எடப்பாடி பழனிசாமியின் பேச்சு உள்ளது. எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தாமல் அமமுக ஓயாது. கரூர் கூட்ட நெரிசல் என்பது விபத்துதான், அது திட்டமிட்டசதியாக இருக்க வாய்ப்பில்லை. கரூர் துயரத்தில் பாஜக அரசியல் செய்வது உண்மையிலேயே வருத்தம் தருகிறது.
கரூர் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு இணையாக பாஜகவும் அரசியல் செய்கிறது. கும்பமேளா கூட்ட நெரிசலின் போது பாஜக என்ன கருத்து சொன்னது என்பது அனைவருக்கும் தெரியும். கொடிய துயரத்தை அரசியலாக்க வேண்டாம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது குழு அனுப்பாத பாஜக, கரூருக்கு மட்டும் அனுப்பியது ஏன்? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்தபோது பாஜக குழு அங்கு செல்லாதது ஏன்?கரூர் துயரத்தை அரசியலாக்க வேண்டாம்; இனி ஒரு உயிர் கூட போகாத அளவு அரசியல் கட்சிகள் செயல்பட வேண்டும் என்று கூறினார்.