கரூரில் கோயில் நிலத்தில் கட்டப்பட்டிருந்த 23 வீடுகளுக்கு சீல் வாக்குவாதம் செய்த காங்கிரஸ் எம்பி, அதிமுக மாஜி, திமுக நிர்வாகிகள் கைது: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி
கரூர்: கரூர் வெண்ணைமலை பகுதியில் பாலசுப்பிரமணியம் கோயிலுக்கு சொந்தமான 470 ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமித்திருந்த வீடுகளுக்கு ஐகோர்ட கிளை உத்தரவின்படி சீல் வைக்க கடந்த 16ம் தேதி இனாம்கரூர் பகுதிக்கு சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்டு கோயில் முன்பு 500க்கும் மேற்பட்டோர் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் திரும்பி சென்றனர். இந்நிலையில் போதூர் ரோடு பகுதியில் கோயில் நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளுக்கு சீல் வைக்க அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமனிகாந்தன் தலைமையிலான அதிகாரிகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை 8.30 மணியளவில் வந்தனர்.
அப்போது சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த கண்ணம்மாள் உள்ளிட்ட 4 பேர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த பாதுகாப்பு போலீசார் விரைந்து வந்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர். தகவலறிந்து வந்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், திமுக ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குமார், வேலுசாமி மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் திரண்டு வீடுகளுக்கு சீல் வைக்க கூடாது என மக்களுக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையே போதூர் ரோடு பகுதியில் கோயில் நிலத்தில் கட்டப்பட்டிருந்த 23 வீடுகளில் உள்ள குடியிருப்புவாசிகள் அனைவரும் அதிரடியாக வெளியேற்றப்பட்டு அந்த வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டது. சீல் வைப்பை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கரூர் -சேலம் பைபாஸ் சாலையில் 11.30 மணியளவில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 156 பேரை எஸ்பி ஜோஸ் தங்கையா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் வீடுகளுக்கு சீல் வைக்க விடாமல் அறநிலையத்துறை அதிகாரிகளை தடுத்ததோடு, அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக எம்பி ஜோதிமணி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திமுக ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குமார், வேலுசாமி உள்பட 244 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலை 6 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.