கரூர் நெரிசல் விபத்தில் 41 பேர் இறந்த விவகாரம் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்திய யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது: சென்னை பெருநகர சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை
சென்னை: கரூர் நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை சென்னை பெருநகர சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். தவெக தலைவர் நடிகர் விஜய் பரப்புரை கூட்டத்தில் சிக்கி குழந்தைகள், இளம்பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக யூகத்தின் அடிப்படையில் உண்மைக்கு புறம்பாக சமூக வலைத்தளங்களில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பதிவுகள் செய்து வருகின்றனர்.
இது பாதிக்கப்பட்டவர்களின் மனதை மிகவும் புண்படுத்தும் வகையில் இருப்பதாக சென்னை பெருநகர காவல்துறைக்கு பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல்துறையில் 25க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின்படி அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கரூர் விவகாரம் பேசியது மற்றும் வீடியோ வெளியிட்டதாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சென்னை சைபர் க்ரைம் போலீசார் சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பாஜ மாநில கலை பிரிவு செயலாளர் சகாயம் (38), தமிழக வெற்றி கழகத்தில் ஆவடி வட்ட செயலாளர் சரத்குமார் (32), மாங்காடு தமிழக வெற்றி கழக உறுப்பினர் சிவனேஸ்வரன் (36) ஆகியோரை கைது செய்தனர்.
போலீசாரின் எச்சரிக்கையை மீறி மீண்டும் பொது மக்களிடையே கரூர் விபத்து குறித்து தொடர்ந்து தனது யூடியூப் சேனலில் அவதூறு கருத்து பரப்பவும், தன்னை புலனாய்வு நிபுணர் என்ற பெயரில் சம்பவம் நடந்த வீடியோக்களை வைத்து பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்பிய யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மீது ஐடி சட்டப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, இன்று காலை சென்னை சைபர் க்ரைம் போலீசார் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை அதிரடியாக கைது செய்தனர்.
அவரிடம் அவதூறாக பரப்பிய வீடியோக்கள் தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு கூட, விஜயை சொட்டை என்று கூட்டத்தில் இருந்தவர்கள் சிலர் திட்டுவதுபோல வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் கூட்டத்தில் புகுந்து சிலர் கத்தியால் வெட்டினர் என்றும் நடக்காத சம்பவத்தை நடந்ததுபோல வெளியிட்டுள்ளார். இதனால் கலவரத்தை தூண்டும் வகையில் அவர் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இதுவரை 25க்கும் மேற்பட்ட யூடியூபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வீடியோ பதிவுகள் மற்றும் கருத்துகள் கூறியது தொடர்பாக ஆய்வு செய்து கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.