கரூரில் இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக அதிமுக-பாஜ துணை நிற்கிறது: திமுக அமைப்பு செயலாளர் கடும் கண்டனம்
சென்னை: திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்ட அறிக்கை: கரூர் துயரத்தில் தன் மகனை பறிகொடுத்த தந்தை பன்னீர்செல்வம் சார்பில் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவரது மனைவி தற்போது கூறும் உண்மைகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன. தன் மனைவி மற்றும் மகனை கைவிட்டு தனியாக வாழும் பன்னீர்செல்வம் தற்போது துயரத்திற்கு காரணமான தவெக கட்சி அளிப்பதாக சொன்ன நிவாரண பணத்திற்காக வழக்கு தொடுத்துள்ளார் என்ற உண்மையை வெளிப்படுத்தி உள்ளார் அச்சிறுவனை இழந்த தாய்.
அதே போல தன் மனைவியை இழந்த செல்வராஜ் என்பவரிடம் அதிமுக ஒன்றிய செயலாளர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் என்பவர் மூலம் ஏமாற்றி போலியாக கையெழுத்து பெற்று அவர் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை வேண்டி வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இது பற்றி செல்வராஜ் வெளியிட்டுள்ள காணொலியில் தனக்கு தன் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதே தெரியாது என்கிறார்.
இப்படி கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் பலரை அரசியல் உள்நோக்கத்திற்காக முறைகேடாக பயன்படுத்துவதை அதிமுக மற்றும் தவெக செய்து வருவது இன்று வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இதற்காக அதிமுக மற்றும் பாஜவின் மறைமுக உதவியை தவெக பெற்றுள்ளதும் அம்பலமாகி உள்ளது.
ஏய்த்துப்பிழைப்பதையே வாடிக்கையாக கொண்ட எடப்பாடி பழனிசாமி இவ்விவகாரத்திலும் மக்களை ஏய்க்க நினைக்கிறார். தான் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் என்பதையும் மறந்து அரசியல் சுய லாபத்திற்காக இப்படி மூன்றாம்தர அரசியலை கையில் எடுத்து இருப்பது வெட்கக்கேடு. இதற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.