கரூரில் அடுத்தடுத்து தலைவர்கள் பிரசாரம் இன்று எடப்பாடி, நாளை விஜய், 28ம் தேதி அன்புமணி
கரூர்: கரூரில் இன்று இரவு எடப்பாடி பழனிசாமியும், நாளை விஜய், 28ம்தேதி அன்புமணி ஆகியோரும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கரூரில் 2 நாள் பிரசாரத்தை நேற்று (25ம்தேதி) தொடங்கி இரவு கரூர் வேலுசாமிபுரத்தில் பேசினார். 2வது நாளாக இன்று (26ம்தேதி) மாலை 6 மணிக்கு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்டானாவில் பிரசாரம் செய்கிறார்.
தொடர்ந்து, இரவு 7 மணிக்கு கிருஷ்ணராயபுரம் தொகுதி தரகம்பட்டி பேருந்து நிலையம் அருகிலும், 8 மணிக்கு குளித்தலை தொகுதிக்குட்பட்ட தோகைமலை பேருந்து நிலையம் அருகிலும் பிரசாரம் மேற்கொள்கிறார். இதேபோல் தவெக தலைவர் விஜய் நாளை (27ம் தேதி) கரூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் சின்னதாரம்புரம் பகுதியில் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாமக தலைவர் அன்புமணி வரும் 28ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் அருகில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக உழவர் சந்தை வரை நடைபயணம் செல்கிறார்.
பின்னர் உழவர் சந்தை அருகே இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அன்புமணி நாளை (27ம் தேதி) கரூரில் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. திடீரென அன்புமணி, தனது பிரசாரத்தை வரும் 28ம் தேதிக்கு மாற்றி உள்ளார். விஜய் செல்போன் மூலம் பேசி கேட்டுக்கொண்டதின் பேரில் அன்புமணி தனது பிரசாரத்தை மாற்றிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தின் கவனத்தையே ஈர்க்கும் அளவுக்கு கரூரில் கடந்த 17ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் லட்சகணக்கான தொண்டர்களும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர்களும் எழுச்சியுடன் திரண்டனர். இதனால் கரூர் நகரமே குலுங்கியது. இந்நிலையில் விஜய் தனது சுற்றுப்பயணத்தை மாற்றி அமைத்து 27ம் தேதி (நாளை) கரூருக்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி, விஜய், அன்புமணி ஆகியோர் அடுத்தடுத்து 3 நாட்கள் பிரசாரத்துக்கு வருவது கரூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.