கரூர் சம்பவம் போல் இனி மேல் நாட்டில் எங்கும் நிகழக்கூடாது: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி
கரூர்: கரூர் சம்பவம் போல் இனி மேல் நாட்டில் எங்கும் நிகழக்கூடாது என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கரூரில் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கரூர் சென்றுள்ளார். அப்போது வேலாயுதம்பாளையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; கரூரில் நிகழ்ந்த அசம்பாவிதம் அதிர்ச்சி அளிக்கிறது. நாட்டில் இனி இதுபோன்ற சம்பவம் ஏதும் நடைபெறக் கூடாது. கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம் நலம் விசாரித்தேன். பாதிக்கப்பட்டோர் பேசுவதை கேட்டவுடன் கலங்கி நின்றேன். பிரதமர் மோடி நேரடியாக கரூருக்கு வர விரும்பினார். பிரதமர் வர முடியாத நிலையில் எங்களை நேரில் சென்று ஆறுதல் கூற அனுப்பி வைத்தார்.
கரூர் இறப்புகள் குறித்து சமூகவலைதளம் மூலம் இரங்கல் தெரிவித்த பிரதமர் எங்களை பார்வையிட அறிவுறுத்தினார். சிகிச்சையில் உள்ளோர் குறித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டோர் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல கூட வார்த்தை வரவில்லை. கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்தது போன்ற சம்பவம் இனி எங்குமே நடக்கக் கூடாது. பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க மட்டுமே வந்தோம்; இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. சிகிச்சை பெறுவோரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.
உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்ததால் ஏற்பட்ட பாதிப்புதான் நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் பாதிப்புகள் தொடர்பாக யாரையும் குற்றம்சாட்ட நான் விரும்பவில்லை. கட்சி சார்பில் விமர்சனங்களை முன்வைக்க நான் இங்கு வரவில்லை என்று கூறினார்.