கரூர் சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக-அதிமுக காரசார விவாதம் கூட்டணிக்கு ஆள் தேடிக்கொண்டு இருக்கிறீர்களா என்ற முதல்வரின் கேள்வியால் எடப்பாடி பழனிசாமி டென்ஷன்
* அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா; சபாநாயகர் எச்சரித்ததால் வெளிநடப்பு
சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாகபேரவையில் நேற்று திமுக-அதிமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடந்தது. அப்போது, பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக கூட்டணிக்கு ஆள் தேடிக் கொண்டு இருக்கிறீர்களா என கேள்வி எழுப்பினார். இதனால் எடப்பாடி பழனிசாமி டென்ஷன் ஆனார். பின்னர், அமைச்சர் சிவசங்கரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை வெளியேற்ற அவை காவலர்களை அழைத்ததும், அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பேரவையில் நேற்று கரூரில் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அவரது கூட்டத்திற்கு எவ்வளவு பேர் வருவார்கள் என்று அரசுக்கு உளவுத்துறை தகவல் தெரிவித்து இருக்கும். அதற்கு ஏற்ப பாதுகாப்பு கொடுத்து இருந்தால் உயிரிழப்பை தவிர்த்து இருக்கலாம்.
நாங்கள் கரூரில் பிரசாரம் செய்ய கடந்த 21.1.2025 அன்று போலீசாரிடம் அனுமதி கேட்டபோது, இது முக்கியமான சாலை, குறுகிய சாலை, பொதுக்கூட்டம் நடத்த வேறு இடம் தேர்வு செய்யுங்கள் என்று காவல்துறை சொன்னது. அப்படி விளக்கம் கொடுத்த பிறகு தவெகவுக்கு கூட்டம் நடத்த அனுமதி கொடுத்ததில் ஏதோ உள்நோக்கம் இருப்பதற்கான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
* சபாநாயகர் அப்பாவு: உள்நோக்கம் என்ற வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஊரில் கல்யாணம், மார்பில் சந்தனம் என்று கூறுவது போல், கூட்டணி கட்சிக்கு ஆட்களை தேடிக் கொண்டு இருக்கிறீர்கள். இந்த சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.
* எடப்பாடி: கோபமாக... கூட்டணிக்காக பேசுகிறோம் என்று எப்படி கூறலாம். இது என்ன நியாயம்? அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம். இதை நாங்கள் அரசியல் ஆக்கவில்லை.
* அமைச்சர் ரகுபதி: 4 மாவட்டத்தில் எந்த பிரச்னையும் நடக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் கூறினார். அங்கும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
* முதல்வர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சி தலைவர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் அளிக்க கூடாதா? கவனத்தை ஈர்த்து பேசுவது தான் முறை. பொத்தம் பொதுவாக பேசக்கூடாது.
* அவை முன்னவர் துரைமுருகன்: கரூரில் என்ன நடந்தது. அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று முதல்வர் விளக்கம் அளித்தார். அதனால் எதிர்க்கட்சி தலைவரும் அதை உணர்ந்து பேச வேண்டும்.
* எடப்பாடி: முதல்வர் பேசியதை நீக்க வேண்டும்.
* முதல்வர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சி தலைவர் பேசிய உள்நோக்கம் என்ற வார்த்தையும் இருக்கட்டும். நான் கூட்டணி குறித்து பேசியதும் இருக்கட்டும்.
* எடப்பாடி: இறந்தவர்கள் உடல்கள் அன்று இரவே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஏன் இந்த அவசரம்?
* அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கரூரில் சம்பவம் நடந்த உடனே கூடுதல் மருத்துவர்கள் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து கரூருக்கு வரைவழைக்கப்பட்டனர். 1,474 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கரூர் மருத்துவமனைக்கு வந்தனர். 5 மேஜைகளில் பிரேத பரிசோனை நடந்தது. 23 மருத்துவர்கள் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டனர். அவசர அவசியம் கருதி, மாவட்ட ஆட்சியரிடம் அனுமதியை பெற்று 28ம்தேதி அதிகாலை 1.45 மணிக்கு பிரேத பரிசோதனை தொடங்கப்பட்டு அன்று மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. 14 மணி நேரத்தில் 39 பேரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான விபத்தில் 229 பேர் மரணமடைந்தனர். கை, கால்கள் இழந்து கரிக்கட்டையாக கொண்டு வரப்பட்ட உடல்கள் அனைத்தும் 12 மணி நேரத்தில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டது. ஆனால் கரூர் சம்பவம் முழு உடலாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒளிவு, மறைவு எதுவும் இல்லை. அரசியல் ெசய்வதை ஏற்க முடியாது.
* அமைச்சர் எ.வ.வேலு: எதிர்க்கட்சி தலைவர் வாகனத்தில் வந்தபோது 2 பக்கமும் தொண்டர்களை பார்த்து கையை அசைத்து வந்தார். ஆனால் தவெக தலைவர் விஜய் தொண்டர்களை பார்த்து கை அசைக்காமல், பஸ்சுக்குளே போய் அமர்ந்து கொண்டார். இதனால் ரசிகர்கள் அந்த வாகனத்தை பின்தொடர்ந்து வந்தனர். உங்களை மாதிரி கையை காட்டி சென்று இருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது. அவரைவிட உங்களுக்கு அதிகமாக கூட்டம் வந்தும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை.
* எடப்பாடி: நான் அந்த பிரச்னைக்குள் செல்ல விரும்பவில்லை. உயிரிழப்பு ஏற்பட்டது ஏன்? அதற்கான காரணத்தை சொல்லுங்கள். சம்பவம் நடந்த அன்றே ஒரு நபர் ஆணையம் அரசால் அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரும் 28ம் தேதி காலை 6 மணிக்கே தனி விமானத்தில் அங்கு சென்று பார்வையிட்டார். விசாரணை ஆணையம் நியமிக்கப்பட்ட அடுத்த நாளே அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகள் போல் பேட்டி கொடுத்தது சரியான நடைமுறையா?
* சபாநாயகர் அப்பாவு: அப்படியென்றால் எம்பிக்கள் குழு வந்ததும் தப்புதானே....
* முதல்வர் மு.க.ஸ்டாலின்: அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி 28ம் தேதி மதியம்தான் கரூர் சென்றார். தனி விமானத்தில் செல்லவில்லை. அதுதான் உண்மை. கொரோனா சம்பவத்தின்போதும், முதல்வர் ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்றோர் மருத்துவமனையில் இருந்தபோதும் அரசு அதிகாரிகள் தான் பேட்டி அளித்தனர். அதே நடைமுறை தான் கரூர் பிரச்னையிலும் எடுக்கப்பட்டது.
* எடப்பாடி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் இறந்தபோது ஏன் முதல்வர் பார்க்க செல்லவில்லை.
* முதல்வர் மு.க.ஸ்டாலின்: அது கள்ளச்சாராய சாவு. கரூர் சம்பவம் அப்பாவி பொதுமக்கள். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் அப்பாவி மக்கள் 13 பேர் இறந்தபோது நீங்கள் ஏன் செல்லவில்லை.
* எடப்பாடி: கரூரில் ஒவ்வொரு முறை அதிமுக கூட்டம் நடத்தும்போதும் நீதிமன்றம் சென்றுதான் அனுமதி வாங்கும் நிலை உள்ளது.
* முதல்வர் மு.க.ஸ்டாலின்: கரூரை பொறுத்தவரை கூட்டம் நடத்துவது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் 24.3.2025ல் நடத்தப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில்தான் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
* எடப்பாடி: கரூரில் நடந்தது மிகவும் துயரமான சம்பவம். கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கொடுத்து இருந்தால், இதுபோன்ற சம்பவம் நடந்து இருக்காது.
* அமைச்சர் எ.வ.வேலு: உங்கள் ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்துபோது உயிரிழப்பு சம்பவத்தில் விசாரணை அதிகாரியாக அருணா ஜெகதீசன் தான் நியமிக்கப்பட்டார். அவர் நேர்மையான அதிகாரி என்பதால் தான் இந்த சம்பவத்திலும் நியமிக்கப்பட்டார். (தொடர்ந்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வரின் நடவடிக்கையை பாராட்டி பேசினார். அப்போது, அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தையும் குறிப்பிட்டு பேசினார். அமைச்சர் சிவசங்கர் பேசிய சில வரிகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி எடப்பாடி மற்றும் அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். தொடர்ந்து அமைச்சர் பேச்சுக்கு பதில் அளிக்க சபாநாயகரிடம் எடப்பாடி அனுமதி கேட்டார். ஆனால் அனுமதி அளிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர்.)
* சபாநாயகர் அப்பாவு: ஒரு மணி நேரம் நீங்கள் பேசினீர்கள்... அப்படி இருந்தும் எங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்று கோஷம் எழுப்புவது நியாயமா? தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியபடி சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து கோஷம் எழுப்பினர். சபாநாயதர் அப்பாவு பலமுறை, அதிமுக உறுப்பினர்களை இருக்கைக்கு போகும்படி எச்சரித்தும், அவர்கள் தங்களது இருக்கைக்கு செல்ல மறுத்துவிட்டனர். இதையடுத்து அவை காவலர்களை அழைத்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்று அப்பாவு உத்தரவிட்டார். ஆனால் அவை காவலர்கள் உள்ளே வருவதற்கு முன்பு, அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கோஷம் எழுப்பியபடி எடப்பாடி தலைமையில் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினர்.
* அதிமுகவினர் வெளிநடப்பு ஏன்? முதல்வர் பேச்சு
பேரவையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: எதிர்க்கட்சித் தலைவர், நெடுநேரம் பேசிவிட்டு சபாநாயகர் தெரிவித்தது போல, இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளில், குற்றச்சாட்டுகள் சொல்ல இயலாத காரணத்தால் அவை நடவடிக்கைகளில் குந்தகம் விளைவித்து வெளியில் சென்றிருக்கிறார்கள். அனைத்து உறுப்பினர்களும் இங்கே வழங்கியிருக்கக்கூடிய ஆக்கபூர்வமான கருத்துகளை அரசு கவனத்திலே கொண்டு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
* கருப்புப்பட்டை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள்
பேரவையின் 2வது நாள் கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்க வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் இடது கையில் கருப்பு பட்டை அணிந்து வந்தனர். மேலும் செங்கோட்டையன் எம்எல்ஏவும் கருப்பு பட்டை அணிந்து அவை நடவடிக்கையில் பங்கேற்றார். எதிர்க்கட்சியினர் முன்வரிசையில் அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பின்னால் திரும்பி பார்த்தார்.
அப்போது செங்கோட்டையனும் கையில் கருப்பு பட்டை அணிந்து இருப்பதை பார்த்து சிரித்தார். ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர். ஆனால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கருப்பு பட்டை அணிந்து வரவில்லை. வழக்கம் போலவே வந்தனர். தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு பட்டை அணிந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவையில் ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் சகஜமாக பேசிக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.