கரூரில் பயங்கரம் ஓட்டல் தொழிலாளி மிதித்து கொலை சிறுவன், வாலிபர் வெறிச்செயல்
கரூர்: கரூர் லைட்ஹவுஸ் பகுதியில் வசித்து வந்தவர் சுப்பிரமணி (60). ஓட்டல் தொழிலாளியான இவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை பறி போனது. இதனால் விரக்தியில் தினமும் மது அருந்தி வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மது அருந்திய சுப்பிரமணி, நேற்று அதிகாலை 3 மணியளவில் லைட்ஹவுஸ் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நின்ற சிறுவன், வாலிபரை பார்த்து யாருடா நீங்க. இந்த நேரத்தில் இங்கு நிற்கிறீர்கள் என போதையில் கேட்டுள்ளார். இதில் பதிலுக்கு, அவர்களும் அதையே கேட்க இருதரப்புக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இருவரும் போதையில் இருந்ததால் ஆத்திரத்தில் சுப்பிரமணியை சரமாரி தாக்கி கீழே தள்ளினர். பின்னர் நெஞ்சில் ஏறி நின்று மிதித்துள்ளனர். இதில் சுப்பிரமணி மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து சரண்ராஜ்(19) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.