தலைவருக்கே ஒழுக்கம் இல்லை... தொண்டர்களுக்கு எப்படி இருக்கும் கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு நடிகர் விஜய்யே பொறுப்பு: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் பரபரப்பு புகார்
சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று புகார் ஒன்று அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியதாவது: எனது வீட்டிற்கு கடந்த 2, 3 மாதங்களாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. அதனால் சென்னை காவல்துறையிடம் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளேன். பாஜ அலுவலகத்தில் கொட்டாவி விட்டு கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அண்ணாமலைக்கு எற்காக பாதுகாப்பு? கலைஞர் குடும்பத்துடன் 40 ஆண்டுகளாக நட்புடன் இருந்து வருகிறேன். எனக்கு யாரும் எதிரிகள் இல்லை. பாஜ தமிழ்நாட்டில் ஒருபோதும் ஆட்சி அதிகாரத்திற்கு வராது. பாஜ கரூர் உயிரிழப்பை வைத்து அரசியல் செய்கிறது. கரூர் விவகாரத்தில் விஜய் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறி விட்டார்.
அது அவருடைய தவறு. அதுமட்டுமின்றி காவல்துறைக்கு சரியான தகவல் அளிக்காமலும் விஜய் கூட்டத்திற்கு காலதாமதமாக வந்ததே இந்த துயர சம்பவத்திற்கு காரணம். தவெக தலைவருக்கே ஒழுக்கம் இல்லாத போது, தொண்டர்களுக்கு எப்படி இருக்கும். இந்த கூட்டம் ஒழுக்கமற்ற கூட்டம். சினிமா நடிகர் பின்னாடி போகாதீங்க, ரசிகர் மன்றம் தேவையில்லை, விஜய் எம்ஜிஆராக முடியாது. விஜய் ஒரு நல்ல தலைவனாக இருந்தால், கரூர் சென்று இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி இருக்க வேண்டும். நடிகர் ரஜினிகாந்திற்கு பால் அபிஷேகம் செய்தாலும் தவறு தான். அவர் என்ன கடவுளா? என்னை விட அதிக சம்பளம் வாங்குகிற ஒரு நடிகர் அவ்வளவு தானே தவிர, நடிகர் ரஜினிகாந்த் முன்கூட்டியே இதுபோன்று பிரச்னைகள் எல்லாம் வரும் என்று தெரிந்துகொண்டு தான் அரசியலில் இருந்து விலகி விட்டார்.
27 ஆயிரம் பேர் இருக்கும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத விஜய். 10 கோடி பேர் இருக்கும் தமிழகத்தை கட்டுப்படுத்த முடியுமா? விஜய் எனக்கு எதிரி அல்ல. அவர் தந்தை சந்திரசேகரின் பேச்சை கேட்காமல் புஸ்ஸி ஆனந்த் பேச்சை கேட்டதாலேயே இந்த பிரச்னை விஜய்க்கு. நடிகர் ரஜினிகாந்த் போல விஜய்யும் அரசியலில் இருந்து பின் வாங்கி விடுவார். கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் விஜய்யை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. விஜய் பின்னணியில் பாஜ இருப்பதாக சொல்வது அவருக்கான சாபம். 2026 மற்றும் 2031ம் ஆண்டு தேர்தலிலும் விஜய்க்கு வாய்ப்பு இல்லை. இவ்வாறு நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.