கரூர் துயரம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு: பதில்மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாது என அரசு தரப்பு வாதிட்டது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூரில் நடத்தப்பட்ட பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 2 வயது குழந்தை மற்றும் பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஜி.எஸ்.மணி, ரவி, செந்தில்கண்ணன் உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை கடந்த 3ம் தேதி விசாரித்த நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அடங்கிய அமர்வு, ‘காவல்துறை விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், தற்போதைய சூழ்நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியதில்லை’ எனக் கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
மேலும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, பாஜக மூத்த தலைவர் உமா ஆனந்தன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘சிபிஐ விசாரணை கோரிய மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளில் ஒருவர், தற்போதைய விசாரணை திருப்தி தரவில்லை என கூறி இருக்கிறார். இருந்தும் சிபிஐ விசாரணைக்கான மனு தள்ளுபடி செய்யப்பட்டது’ என வாதிட்டார்.
வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை (அக். 10) விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றும் உத்தரவிட்டனர். அதேபோல் சிபிஐ விசாரணை கோரி, பன்னீர்செல்வம் (உயிரிழந்த 13 வயது சிறுவனின் தந்தை), ஜி.எஸ். மணி (பாஜக சார்பில்), ஆதவ் அர்ஜூனா (த.வெ.க சார்பில்) மனு தாக்கல் ெசய்திருந்தனர். இந்நிலையில் இன்று நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி மகேஸ்வரி: ‘பத்தி 3ல், விசாரணை கோரி அரசு வழக்கறிஞர் ஒருவர் ரிட் மனு தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு, பிரிவு 226-ன் கீழ் சென்னையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற நிவாரணம் குற்றவியல் அதிகார வரம்பிற்குள் வருமா? இது எப்படி ஒரு குற்றவியல் ரிட் மனுவாகப் பதிவு செய்ய முடியும்? மேலும், சம்பவம் கரூரில் நடந்துள்ள நிலையில், இந்த மனு வேறு இடத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது’ என்றார். தவெக தரப்பில், ‘இதனை விசாரிப்பதற்காக தலைமை நீதிபதி ஒரு சிறப்பு அமர்வை பிரத்யேகமாக அமைக்க வேண்டும். இந்த வழக்கின் அதிகார வரம்பு மதுரைதான். எதிர்மனுதாரராக இல்லாத விஜயை சென்னை உயர் நீதிமன்றம் விமர்சித்துள்ளது. தலைமை நீதிபதியின் அனுமதி பெற்று, சென்னை உயர் நீதிமன்றம் வழக்கின் விசாரணையை எடுத்ததாக தெரியவில்லை. சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை எதிர்க்கிறோம். மாநில அரசின் விசாரணை குழு மீது நம்பிக்கையில்லை. காவல்துறையின் வழிகாட்டலின்படி தான் கரூரில் இருந்து விஜய் வெளியேறினார். விஜய் தப்பியோடவில்லை.
எந்தவொரு அமைப்பையும் சாராத அமைப்பே விசாரணை நடத்த வேண்டும். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும். ’ என்று வாதிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள், ‘சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் விஜய், தவெகவினர் எதிர்மனு தாரர்களாக உள்ளனரா? சென்னை உயர் நீதிமன்றம், இவ்வழக்கை விசாரித்தது ஏன்?’ என்று கேட்டார். ‘நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு ஏற்கனவே தனி நீதிபதி அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது’ என்றார். அரசு தரப்பு, ‘தயவுசெய்து வழக்கிற்குள்ளான உத்தரவின் 19வது பத்தியைப் பாருங்கள்’ என்றார். நீதிபதி, ‘ஒரே நாளில் வெவ்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளனவா? இம்மனுக்களில் இரண்டு கேள்விகள் எழுகின்றன. ஒன்று, ரிட் மனுவின் தன்மை மற்றொன்று கரூர் சம்பவம்.
ஒரு தரப்பு மனு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்காக தாக்கல் செய்யப்பட்டது. மற்றொன்று மதுரையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு முரண்பாடாக உள்ளது’ என்று கூறினார். தொடர்ந்து வழக்கை மதியம் ஒத்திவைத்தனர். அதன் அடிப்படையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது; தமிழ்நாடு அரசுத் தரப்பு வாதம்: "உயிரிழந்த சிறுவனுடைய தந்தையின் வலி எங்களுக்குப் புரிகிறது. அதே வேளையில் இந்த விவகாரத்தை பொருத்தவரைக்கும், தமிழ்நாடு அரசு சிறப்பு விசாரணைக் குழு அதிகாரியை நியமிக்கவில்லை. மாறாக உயர் நீதிமன்றம்தான் நியமித்தது. அஸ்ரா கர்க் என்ற மூத்த அதிகாரிதான் சிறப்பு விசாரணைக் குழுவினுடைய அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
இந்த அதிகாரி சி.பி.ஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகளில் பணியாற்றியவர். சிறந்த அதிகாரியாக இருந்து கொண்டிருக்கின்றார். எனவே இவருடைய விசாரணையே தொடரலாம். “தன்னுடைய மகனை இழந்து இங்கு நிற்கக்கூடிய அந்த தந்தையினுடைய வலி மட்டுமல்ல, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடைய அனைவரின் வலியையும் நாங்கள் அறிந்துள்ளோம். அதேவேளையில், தான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்ற இந்த ஒரு காரணத்தின் அடிப்படைக் கொண்டு மட்டும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற அனுமதிக்க கூடாது. ஏனெனில் கள நிலவரங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் தமிழ்நாடு அதிகாரிகள்.
எனவே ஒரு சிறந்த அதிகாரியின் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த சிறப்பு விசாரணைக் குழுவில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர வேண்டும். இவ்வாறு பல வழக்குகளை தொடர்ச்சியாக சிபிஐ-க்கு மாற்றிக் கொண்டிருந்தால் சிபிஐ முன்பு அதிக அளவிலான வழக்குகள் குவிந்து கிடக்கும். ஆனால் சிபிஐக்கு இருப்பதோ Limited Resourceதான் என்று கூறியது. கரூர் நெரிசல் தொடர்பான வழக்கில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. தமிழ்நாடு அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.