கரூர் பிரசாரத்தில் 41 பேர் பலியான சம்பவம் விஜய் சென்ற பிரசார வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும்: சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு முழுவிவரம்
சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்நிலையில், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரும், அதுவரை எந்த கட்சிகளுக்கும் ரோடு ஷோக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.எச்.தினேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் பேரணி செல்ல அனுமதி வழங்கப்படாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தெரிவித்துள்ளோம் என்றார். அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், நகர செயலாளர் பவுன் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப்பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புலன் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா விளக்கமளித்தார். இதையடுத்து நீதிபதி செந்தில்குமார், இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
வீடியோக்களை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். தவெக தலைவரும் அக்கட்சி நிர்வாகிகளும் சம்பவ இடத்திலிருந்து மறைந்தோடிவிட்டனர். நடிகர் விஜய் பயணித்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இந்த விஷயத்தில் நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றார். இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், தவெக கேட்ட இடத்தை தான் ஒதுக்கினோம்.
11 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இரு நிபந்தனைகள் மட்டும் பூர்த்தி செய்யப்பட்டன. மீதமுள்ள நிபந்தனைகள் மீறப்பட்டன. இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவை. எனவே, இந்த வழக்கை விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில், நாமக்கல் எஸ்பி விமலா, சிறப்பு புலனாய்வு எஸ்பி சியாமளா தேவி அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்படுகிறது.
விஜய் சென்ற வாகனத்தின் உள்ளேயும் வெளியேயும் உள்ள சிசிடிவி பதிவுகளை பறிமுதல் செய்ய வேண்டும். அவரது பிரசார வேனையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனடியாக சிறப்பு புலனாய்வு குழு வசம் கரூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.