கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவி செய்யப்படும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி
சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று காலை 10 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கரூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. கூட்ட நெரிசலில் பல பேர், தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று முன்தினம் இரவு உடனடியாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு, நிலைமையை கேட்டறிந்து, தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்துள்ளார். அதோடு ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில் இருந்து, கரூர் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அந்த விளக்கத்திற்கு பிறகு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.