அசம்பாவிதம் நடந்தும் கரூர், அரியலூரில் அலட்சியம் தவெக ஆர்ப்பாட்டத்தில் கைக்குழந்தைகள், கர்ப்பிணிகள்: தடுக்காமல் அனுமதித்த நிர்வாகிகள்
அரியலூர்: கரூரில் கடந்த செப்டம்பர் 27ம்தேதி விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அதன் வலியில் இருந்தும், சோகத்தில் இருந்தும் மக்கள் இன்னும் மீளாமல் உள்ளனர். அந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ தனது விசாரணையை முழுவீச்சில் தொடங்கியுள்ளது. வரும் காலத்தில் இது போன்ற துயர சம்பவங்கள் நடந்து விடாமல் இருப்பதற்காக, அரசியல் கட்சிகள் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்காக உயர்நீதிமன்ற உத்தரவின் படி தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தையும் நடத்தி முடித்துள்ளது.
நெரிசலில் பலியானவர்களில் 11 பேர் குழந்தைகள் என்பது தான் வேதனையிலும் வேதனை. இதுபோன்ற கூட்டங்களுக்கு குழந்தைகளை அழைத்துவரக் கூடாது என பலரும் அறிவுறுத்தினார்கள். கர்ப்பிணிகள் வரக்கூடாது என்றும் கூறியிருந்தனர். மற்ற அரசியல் கட்சிகள் இந்த அறிவுரைகளை தொடக்கத்தில் இருந்தே பின்பற்றுகிறார்கள். ஆனால், யார் பிரசாரத்தில் மாபெரும் துயர சம்பவம் நடந்து முடிந்ததோ, அந்த தவெக கட்சியினர் இது போன்ற அறிவுரைகளை எப்போதும் காற்றில் பறக்க விடுகிறார்கள் என்பதற்கு சாட்சியாக நேற்று கரூர், அரியலூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியை எதிர்த்து அரியலூர் அண்ணாசாலை பேருந்து நிறுத்தம் முன்பு நேற்று தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தவெக மாவட்ட துணை தலைவர் பிரியதர்ஷினி என்பவர் கைக்குழந்தையை தூக்கி வந்திருந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பச்சிளம் குழந்தையை இடுப்பில் சுமந்து கொண்டு வாகனத்தில் ஏறி நின்று அவர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதை பார்த்தவர்கள் பதறிப்போனார்கள். இத்தனை பெரிய துயரம் நடந்து, அதன் சுவடே இன்னும் அழியாமல் இருக்கும் நிலையில், அந்த பெண்ணின் செயலை பார்த்து அனைவருக்கும் அதிர்ச்சி தான் ஏற்பட்டது. மேலும், இதே போல் 4 தவெக தொண்டர்கள் கைக்குழந்தைகளுடன் பங்கேற்றனர். மேலும், கூட்டத்தில் 5 கர்ப்பிணி பெண்களும் கலந்து கொண்டனர்.
இதே போல், கரூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு தவெக தொண்டர்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் இதை கவனித்து, தொண்டர்களிடம் குழந்தைகளை அழைத்து வரவேண்டாம் என எடுத்துக் கூறி தடுத்திருக்க வேண்டாமா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.