கரூர் துயரச் சம்பவம்: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன் ஜாமின் கோரி ஐகோர்ட் கிளையில் மனு!
மதுரை: கரூர் துயரச் சம்பவ வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்.27ம் தேதி இரவு தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் அதிகப்படியான மக்கள் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டது. இதில், 41 பேர் பலியாகினர்.
இந்த விவகாரத்தில், தவெகவின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை காணவில்லை என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. மேலும், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் இருவரை நேற்று கைது செய்யப்பட்டு, இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது நீதிமன்றத்திற்கு தசரா விடுமுறை என்பதால் வரும் வெள்ளிக்கிழமை இந்த மனுக்கள் விசாரணைக்கு வரும் எனத்தெரிகிறது. அது போல் கைதான மதியழகன், பவுன்ராஜும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.