கரூர் துயர சம்பவம்: தே.ஜ. கூட்டணி எம்.பி.க்கள் குழுவினரின் கார்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதால் பரபரப்பு
கோவை: கரூரில் த.வெ.கத்தின் தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி சனியன்று மக்கள் சந்திப்பு நடைபெற்றது. அந்த சந்திப்பில் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பல்வேறு அரசு நிர்வாகமும், பல்வேறு அரசியல் கட்சியினரும் விசாரணை குழு அமைத்து அந்த அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக 8 பேர் கொண்ட எம்.பிக்கள் குழுவை ஜே.பி நட்டா நேற்றைய தினம் அமைத்தார். இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு கோவை விமான நிலையத்திலிருந்து அவர்கள் சாலை மார்க்கமாக கரூர் செல்ல இருந்தனர்.
அப்போது விமான நிலையத்திலிருந்து செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொண்டு அங்கிருந்து சின்னியம்பாளையம் அருகே உள்ள ஆர்.டி புதூர் பகுதியிலிருந்து வரிசையாக வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போது ஹேமாமாலினி சென்றுகொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த கார் மோதியதால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. ஹேமாமாலினி காருக்கு பின் பக்கத்தில் மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. அந்த காரில் இருந்த பாஜக நிர்வாகிகள் வேறு காரில் மாறி தற்போது கரூர் சென்றுள்ளது. கார்கள் ஒன்றன் பின் ஒன்று மோதியதால் விபத்து ஏற்பட்டதாகவும் யாருக்கும் எந்தவிதமான காயமும் இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது.