கரூர் துயரம்.. ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்த சென்னை ஐகோர்ட்: யார் இந்த அஸ்ரா கார்க்?
சென்னை: கரூரில் கடந்த 27ம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, கரூர் துயர சம்பவம் குறித்து அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் விவகாரம் தொடர்பாக அஸ்ரா கார்க் ஐஜி வடக்கு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களை உடனடியாக சிறப்பு புலானய்வு குழுவினரிடம் ஒப்படைக்க கரூர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
யார் இந்த அஸ்ரா கார்க்?
அடிப்படையில் அஸ்ரா கார்க் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலாவைச் சேர்ந்தவர். இவர் ஒரு எலக்ட்ரானிக் எஞ்ஜினியர். காவல்துறையின் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக ஐபிஎஸ் தேர்வில் 2004ம் ஆண்டு தேர்ச்சி பெற்றார். தமிழ்நாடு கேடரில் தேர்வான இவர் தனது காவல்துறை பணியை திருப்பத்தூரில் தொடங்கினார். அப்போது, வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்டு இருந்த திருப்பத்தூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது பணியை அஸ்ரா கார்க் தொடங்கினார்.
அப்போது, இவரது பணி அனைவராலும் பாராட்டும் வண்ணம் இருந்தது. பின்னர், 2008ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்டார். அவர் நெல்லை எஸ்பி-யாக பொறுப்பேற்றபோது கந்துவட்டி கொடுமை தலைதூக்கி காணப்பட்டது. இதற்காக தனியாக ஒரு சிறப்பு படையை ஏற்படுத்தினார். இவரது அதிரடி நடவடிக்கையால் அப்போது நெல்லையில் இருந்த ரவுடிகள் அலறினர்.
திருநெல்வேலியில் தனது அதிரடியால் ரவுடிகளை அலறவிட்ட அஸ்ரா கார்க்கிற்கு 2010ம் ஆண்டு மதுரை மாவட்ட எஸ்பி-யாக பதவி வழங்கப்பட்டது. மதுரையில் கிரானைட் குவாரி முறைகேடு, நில அபகரிப்பு புகார் என சவால்களை அதிரடியில் மிரட்டினார். மதுரை உத்தபுரத்தில் இரு சமுதாயத்தினர் மத்தியில் பல ஆண்டுகளாக நிலவி வந்த சாதிய மோதலில் சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தார். நீண்ட காலமாக ஒரு சமுதாயத்தினர் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில் அவர்களை அனுமதிக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
தர்மபுரி மாவட்டத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக இருந்தபோது சில இடங்களில் இருந்த இரட்டைக்குவளை முறையை அடியோடு ஒழித்தார். இவர் கையாண்ட வழக்குளில் பெண் ஒருவர் தனது கணவரை கொன்றதற்காக கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் தனது மகளை தனது கணவனே பாலியல் வன்கொடுமை செய்ய வந்த காரணத்திற்காகவே அந்த பெண் தற்காப்பிற்காக கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பெண்ணை ஐபிசி 100ன் கீழ் விடுவிக்க அஸ்ரா கார்க் உத்தரவிட்டது அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும், தேனியில் எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞருடன் திருமணம் நடக்க இருந்த பெண்ணை கடைசி நேரத்தில் காப்பாற்றி அந்த திருமணத்தையும் தடுத்து நிறுத்தினார். தனது அபாரமான திறமையான மற்றும் தைரியமான அஸ்ரா கார்க்கிற்கு பதவி உயர்வும் தேடி வந்தது. 2016ம் ஆண்டு அவர் மத்திய பணிக்கு சென்றார். அங்கு மத்திய புலனாய்வு பிரிவிற்குச் சென்ற அவர் குர்கானில் நடந்த பள்ளியில் சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நடத்துனர் அப்பாவி என்பதையும், உண்மையான குற்றவாளி யார்? என்பதையும் தனது திறமையால் வெளியில் கொண்டு வந்தார்.
இதையடுத்து, மத்திய பணியில் அவர் இருந்தபோது அவருக்கு டிஐஜியாக 2018ம் ஆண்டு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. பின்னர், மீண்டும் தமிழ்நாட்டிற்கு திரும்பியுள்ளார். 2022ம் ஆண்டு ஐஜியாக நியமிக்கப்பட்டார். தற்போது வடக்கு மண்டல ஐஜியாக பொறுப்பு வகிக்கும் அஸ்ரா கார்க். நேர்மையான அதிகாரியாக பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வரும் அஸ்ரா கார்க்கிற்கு பொதுமக்கள் தொடர்ந்து பாராட்டுகளை குவித்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையையும் இவரது தலைமையில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுகள்:
இவரது கடமை உணர்வை பாராட்டி சிறந்த கடமை அர்ப்பணிப்பிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் விருது, பொது சேவையில் சிறந்து விளங்கியதற்காக முதலமைச்சரின் காவல் பதக்கம், சிறப்பான சேவைக்கான காவல் பதக்கம், முதலமைச்சரின் சிறப்பு பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.