கரூர் நெரிசல் வழக்கு.. அறிவித்த நேரத்துக்கு விஜய் வராததே ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் காரணம்: உச்ச நீதிமன்றத்தில் அரசு தரப்பு
டெல்லி: அறிவித்த நேரத்துக்கு விஜய் வராததே ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் காரணம் என உச்ச நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக 5 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த விசாரணையில் தமிழ்நாடு அரசு தரப்பு வாதம்; விஜய் பகலில் வருவதாக கூறியதால் காலை 7 மணி முதலே பொதுமக்கள் காத்திருந்தனர். சிறப்பு புலனாய்வுக் குழு அல்லது காவல்துறை அதிகாரிகளை சந்தேகிக்க தேவையில்லை. கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க விஜய் இன்று வரை செல்லவில்லை. கரூர் நெரிசல் வழக்கில் விஜய் இன்று வரை சேர்க்கப்படாத நிலையில் ஆறுதல் கூற அவர் செல்லவில்லை. பொதுக்கூட்டம் தொடர்பான நெறி முறைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி விசாரித்ததால் மதுரை அமர்வு அதை எடுக்கவில்லை. சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு நாங்கள் எந்த அதிகாரிகளையும் பரிந்துரைக்கவில்லை என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.