கரூரில் நேர அட்டவணையை தவெக கடைபிடிக்கவில்லை என காவல்துறை வாதம் : தவெக கேட்ட 3 இடமுமே போதுமானது அல்ல என நீதிபதி கருத்து!!
கரூர் : தவெக கேட்ட 3 இடமுமே போதுமானது அல்ல என்று கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் கடந்த 27-ந் தேதி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அப்போது கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் அமர்வு முன்பு நடைபெற்ற வாதங்கள் பின்வருமாறு..
காவல்துறை தரப்பு : கூட்ட நெரிசல் ஏற்பட்ட கரூரில் போலீஸ் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியது. 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்.
தவெக தரப்பு : ஒரு நபர் ஆணைய அறிக்கை வரும் வரையில் யாரையும் கைது செய்யக் கூடாது. விஜய் பரப்புரைக்கு வந்தது தானாக வந்த கூட்டம்; வண்டி வைத்து அழைத்து வரவில்லை.1.20 லட்சம் சதுர அடி கொண்ட லைட் அவுஸ் பகுதியில் போலீஸ் அனுமதி வழங்கவில்லை.
காவல்துறை தரப்பு : லைட் அவுஸ் பகுதியில் அமராவதி ஆற்றுப்பாலம் இருப்பதால் அனுமதி வழங்கவில்லை.விஜய் பிரச்சாரம் நடந்த இடத்தில் இதற்கு முன்பு அதிமுக பிரச்சாரம் நடந்தபோது அதிக வாகனங்கள் வந்தன. அதிக வாகனங்கள் வந்ததால் அந்த இடத்தை விஜய் பிரச்சாரத்துக்கு வழங்கினோம்.
நீதிபதி : மைதானம் போன்ற பகுதியை ஏன் கேட்கவில்லை.
தவெக தரப்பு : இவ்வளவு பெரிய கூட்டம் வருமென்று நாங்களே எதிர்பார்க்கவில்லை. விஜய் கூட்டத்திற்கு முதலில் 10,000 பேர் வருவார்கள் என காவலர்களிடம் கூறினோம்.
நீதிபதி : விஜய் கூட்டத்திற்கு 10,000 பேர் வருவார்கள் என எப்படி கூறினீர்கள்?
தவெக தரப்பு : சம்பள நாள் என்பதால் யாரும் வரமாட்டார்கள் என்று கணித்தோம்.
நீதிபதி : வார விடுமுறை, காலாண்டு விடுமுறை நாளில் எப்படி குறைந்த எண்ணிக்கையில் வருவார்கள் என்று கணித்தீர்கள். விஜய்யை பார்க்க குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள்; அதற்கு தகுந்த இடத்தை கேட்டிருக்க வேண்டும். எடப்பாடியை பார்க்க வருவது கட்சிக் கூட்டம், விஜயை பார்க்க அனைத்து தரப்பினரும் வருவார்கள். தவெக கேட்ட 3 இடமுமே போதுமானது அல்ல. அதிக கூட்டம் வரும் என்று விஜய்க்கு தெரியுமா? அவரிடம் சொல்லப்பட்டதா?.
காவல்துறை தரப்பு : கரூரில் நேர அட்டவணையை விஜய் கடைபிடிக்கவில்லை. வேகமாக வரச் சொல்லி போலீசார் கூறினார்கள். போலீஸ் கூறியதை மீறி ராங் ரூட்டில் சென்றார்கள். புஸ்ஸி ஆனந்த் வாகனத்தை நிறுத்தி முனியப்பன் கோயில் சந்திப்பில் தாமதம் செய்தனர். கரூர் பாலத்தில் இருந்து வேண்டுமென்றே தாமதமாக வந்தனர். முனியப்பன் கோயில் சந்திப்பில் விஜய் கேரவனுக்குள் சென்று விட்டார். கேரவனுக்குள் செல்லாமல் விஜயை பார்த்திருந்தால் கூட்டம் கலைந்திருக்கும். கைது செய்யப்பட்ட மதியழகன், பவுன்ராஜ் இருவரும் வாகனத்தை செல்லவிடாமல் தாமதப்படுத்தியது தான் நெரிசலுக்கு காரணம். கூட்டம் அளவு கடந்து சென்றதும் பேருந்தை முன்பாகவே நிறுத்தி பேசச் சொல்லி நாங்கள் கூறினோம்.இன்னும் முன்னே செல்ல வேண்டும் என ஆதவ் அர்ஜுனா அதை மறுத்துவிட்டார்.
நீதிபதி தரப்பு : கூட்டம் அளவை கடந்து சென்றது என்று தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பிரசாரத்தை நிறுத்தவில்லை.