கரூர் கோர சம்பவத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றும் நாளையும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: கரூர் கோர சம்பவத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றும் நாளையும் அரசு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரத்து செய்தார்.
த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய், வாரம்தோறும் சனிக்கிழமையன்று பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார். முதல் கட்டமாக திருச்சி, அரியலூரில் பிரசாரத்தை தொடங்கிய அவர்,2-ம் கட்டமாக நாகைமற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்தார். அந்த வரிசையில் 3-வது கட்டபிரசாரத்தை நாமக்கல்லில் நேற்று தொடங்கினார். அதனைத்தொடர்ந்து அங்கு பிரசாரத்தை முடித்துக்கொண்டு கரூர் புறப்பட்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று பகல் 12 மணியளவில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அவரை காண நேற்று காலை முதலே அந்த கட்சியின் தொண்டர்கள் ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். இதனையடுத்து நடந்த கூட்டநெரிசலின் காரணமாக ஏராளமானவர்கள் மயங்கி விழுந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் சுமார் 6 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் ஆவார்கள். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் 39 பேர் உயிரிழந்தனர்.
அவர்களது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருபவர்களை சந்தித்து முதல்வர் ஆறுதல் கூறினார். இந்த நிலையில் கரூர் கோர சம்பவத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றும் நாளையும் அரசு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரத்து செய்தார். சென்னை தியாகராயர் நகர் புதிய மேம்பாலம் திறப்பு நிகழ்ச்சியும், நாளை முதலமைச்சர் ராமநாதபுரம் செல்ல இருந்த நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.