கரூர் நிகழ்வு சோகம் தான்; அதையே தினமும் பேச வேண்டாம் என்பது என்னுடைய கருத்து :கமல்ஹாசன்
சென்னை : கரூர் நிகழ்வு சோகம்தான்; அதையே தினமும் பேசவேண்டாம் என்பது என்னுடைய கருத்து என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேற்று இரவு நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதையடுத்து இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "டாக்டர் ராமதாஸ் அய்யா அவர்களை சந்தித்து நலம் விசாரிக்க வந்தேன். விசாரிப்பதற்கு முன்பே நல்ல செய்தி வந்தது. இன்று மாலை அவரை டிஸ்சார்ஜ் செய்கிறார்கள். அவருடன் பேசிக்கொண்டு இருந்தேன். நலமாக இருக்கிறார்.வைகோ அய்யா அவர்களும் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார். அவருக்கும் ஜூரம் தணிந்துவிட்டதாக சொன்னார்கள். அவருடைய மகனிடம் நலம் விசாரித்தேன்.கரூர் நிகழ்வு சோகம்தான்; அதையே தினமும் பேசவேண்டாம் என்பது என்னுடைய கருத்து. கரூர் பலி போல இனி நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமையும் என் கடமையும்தான்."இவ்வாறு தெரிவித்தார்.