கரூர் சம்பவம் குறித்து விஜய் பேசுவது அரசியல் நேர்மையற்ற கருத்து: விமானநிலையத்தில் திருமாவளவன் பேட்டி
மீனம்பாக்கம்: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி, பெங்களூருக்கு புறப்படும்முன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
காவல்துறையில் மட்டுமல்ல, பல்வேறு துறைகளிலும் பாலியல் சீண்டல்கள் இருக்கிறது. தவறு செய்தவர்களை அரசு உடனடியாக கைது செய்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. பெண்களுக்கு பாலியல் சீண்டல் ஏற்படுவதை தடுக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மற்ற மாவட்டங்களில் விஜய் பிரசாரம் அமைதியாக நடந்தது என்றால், அவையெல்லாம் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் உள்ளதா? இதில் விஜய்யின் ஒப்பீடே தவறானது. மற்ற மாவட்டங்களில் பாதுகாப்பு தந்த தமிழ்நாடு காவல்துறைதான் கரூரிலும் இருந்தது. கரூரில் செந்தில் பாலாஜி மட்டுமே குற்றவாளி என்று சொல்ல விஜய் விரும்புகிறாரா? அப்படி என்றால் அவர் எவ்வகையான குற்றம் செய்தார்? இவ்வாறு விஜய் கூறுவது அரசியல் நேர்மையற்ற கருத்து.
இதை அவர் சுயமாக சிந்தித்து சொல்லவில்லை. விஜய்யை சுற்றி இருக்கும் சங்பரிவார், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜவினர் கொடுக்கும் தகவல்களை மட்டும் பேசுகிறார். அவருக்காக டெல்லியிலிருந்து ஹேமமாலினி தலைமையில் ஒரு குழுவே வந்துள்ளனர். அதற்கு என்ன தேவை ஏற்பட்டது? எதற்காக அவர்கள் உள்ளே நுழைகின்றனர்? விஜய்மீது தப்பில்லை, அரசுமீதுதான் தப்பு என்று அண்ணாமலை பேசுகிறார். இதுபோன்ற அரசியல் கருத்து விஜய்க்கு எதிராக போய் முடியும். கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வருவதை எல்லாம் ஒரு பிரச்னையாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் சுயமாக சிந்தித்து, எப்போது செயல்திட்டங்களை வரையறுக்கிறாரோ, அப்போதுதான் அவருக்கு, நல்ல அரசியல் எதிர்காலம் உருவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.