கரூரில் கோலாகலமாக தொடங்கியது திமுக முப்பெரும் விழா; முப்பெரும் விழா திடலிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
கரூர்: கரூரில் திமுகவின் முப்பெரும் விழா தொடங்கியது. 7 பேருக்கு விருதுகள் வழங்கி, 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இதில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் கரூரில் குவிந்துள்ளனர்.
திமுக சார்பில் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் செப்டம்பர் 17ம் தேதி கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான முப்பெரும் விழா இன்று (17ம் தேதி) கரூர் கோடங்கிப்பட்டியில் நடைபெறுகிறது. இதற்காக கடந்த 3-ம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. 50 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் 60 அடி அகலம், 200 அடி நீளத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டது. பந்தலின் முன் பகுதியில் 100 அடி உயர கொடிக்கம்பம் நடப்பட்டுள்ளது. 1 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இந்த பணிகளை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, வெள்ளக்கோவில் சாமிநாதன், முத்துசாமி, சக்கரபாணி நேரில் பார்வையிட்டனர்.
முப்பெரும் விழா நடைபெறும் இடத்தின் நுழைவுவாயில் கோட்டை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடத்தின் பக்கவாட்டில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொண்டர்களின் வசதிக்காக தற்காலிக கழிவறைகள், வாகனங்களை நிறுத்த பந்தலின் முன்பும், பின்புறமும் பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டுள்ளது.
மெயின் பகுதியில் 3 நுழைவாயில், பக்கவாட்டு, பின்புறம் 2 என மொத்தம் 5 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகளில் 15 மெட்டல் டிடெக்டர்கள் கதவுகள் வைக்கப்பட்டு தொண்டர்கள், பொதுமக்கள் சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுவர். மேலும் முதல்வர் மற்றும் நிர்வாகிகள் பேசுவதை பார்க்க பந்தல் மற்றும் வெளிப்பகுதிகளில் மொத்தம் 10 எல்இடி திரைகள் வைப்பட்டுள்ளது.