கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க கோரிய மனு மீது அக்.13இல் தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
டெல்லி: கரூர் சம்பவம் தொடர்பாக அரசு விசாரணைக் குழு அமைத்த நிலையில் சிபிஐ விசாரணை கோரி மேல்முறையீடு செய்தது. வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று வாதங்கள் நடந்த நிலையில் அக்.13இல் தீர்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த மாதம் 27ஆம் தேதி கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். வழக்கை விசாரிக்க எஸ்ஐடியை உயர் நீதிமன்றம் அமைத்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பு மனு அளித்துள்ளது.
கரூர் நெரிசல் விபத்து தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் பிற்பகல் வரை காரசாரமான விசாரணை நடைபெற்றது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூரில் நடத்தப்பட்ட பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 2 வயது குழந்தை மற்றும் பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஜி.எஸ்.மணி, ரவி, செந்தில்கண்ணன் உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை கடந்த 3ம் தேதி விசாரித்த நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அடங்கிய அமர்வு, ‘காவல்துறை விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், தற்போதைய சூழ்நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியதில்லை’ எனக் கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. மேலும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, பாஜக மூத்த தலைவர் உமா ஆனந்தன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘சிபிஐ விசாரணை கோரிய மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளில் ஒருவர், தற்போதைய விசாரணை திருப்தி தரவில்லை என கூறி இருக்கிறார். இருந்தும் சிபிஐ விசாரணைக்கான மனு தள்ளுபடி செய்யப்பட்டது’ என வாதிட்டார். வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கு வரும் அக். 10 விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றும் உத்தரவிட்டனர். அதேபோல் சிபிஐ விசாரணை கோரி, பன்னீர்செல்வம் (உயிரிழந்த 13 வயது சிறுவனின் தந்தை), ஜி.எஸ். மணி (பாஜக சார்பில்), ஆதவ் அர்ஜூனா (த.வெ.க சார்பில்) மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி மகேஸ்வரி விசாரணை கோரி அரசு வழக்கறிஞர் ஒருவர் ரிட் மனு தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு, பிரிவு 226-ன் கீழ் சென்னையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற நிவாரணம் குற்றவியல் அதிகார வரம்பிற்குள் வருமா? இது எப்படி ஒரு குற்றவியல் ரிட் மனுவாகப் பதிவு செய்ய முடியும்? மேலும், சம்பவம் கரூரில் நடந்துள்ள நிலையில், இந்த மனு வேறு இடத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது’ என்றார். தவெக தரப்பில், ‘இதனை விசாரிப்பதற்காக தலைமை நீதிபதி ஒரு சிறப்பு அமர்வை பிரத்யேகமாக அமைக்க வேண்டும். இந்த வழக்கின் அதிகார வரம்பு மதுரைதான்.
எதிர்மனுதாரராக இல்லாத விஜயை சென்னை உயர் நீதிமன்றம் விமர்சித்துள்ளது. தலைமை நீதிபதியின் அனுமதி பெற்று, சென்னை உயர் நீதிமன்றம் வழக்கின் விசாரணையை எடுத்ததாக தெரியவில்லை. சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை எதிர்க்கிறோம். மாநில அரசின் விசாரணை குழு மீது நம்பிக்கையில்லை. காவல்துறையின் வழிகாட்டலின்படி தான் கரூரில் இருந்து விஜய் வெளியேறினார். விஜய் தப்பியோடவில்லை.
எந்தவொரு அமைப்பையும் சாராத அமைப்பே விசாரணை நடத்த வேண்டும். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும். ’ என்று வாதிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள், ‘சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் விஜய், தவெகவினர் எதிர்மனு தாரர்களாக உள்ளனரா? சென்னை உயர் நீதிமன்றம், இவ்வழக்கை விசாரித்தது ஏன்?’ என்று கேட்டார்.
‘நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு ஏற்கனவே தனி நீதிபதி அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது’ என்றார். அரசு தரப்பு, ‘தயவுசெய்து வழக்கிற்குள்ளான உத்தரவின் 19வது பத்தியைப் பாருங்கள்’ என்றார். நீதிபதி, ‘ஒரே நாளில் வெவ்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளனவா? இம்மனுக்களில் இரண்டு கேள்விகள் எழுகின்றன.
ஒன்று, ரிட் மனுவின் தன்மை மற்றொன்று கரூர் சம்பவம். ஒரு தரப்பு மனு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்காக தாக்கல் செய்யப்பட்டது. மற்றொன்று மதுரையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு முரண்பாடாக உள்ளது’ என்று கூறினார். தொடர்ந்து மாலை விசாரணை தொடர்ந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்த பின்பு அக்டோபர் 13ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.