கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
டெல்லி: கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி விஜய் கலந்து கொண்ட பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நெஞ்சை உலுக்கும் இந்த சம்பத்தை அரசியலாக்குவதிலும், மற்றவர்கள் மீது பழியை போட்டு தப்பிப்பதிலும் தவெகவினர் குறியாக இருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. அதேபோல், தவெக தலைவர் விஜய்க்கு கடும் கண்டனங்களை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு விசாரணை குழு அமைத்தது. இதை ரத்து செய்யக்கோரி தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இதேபோல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவன் பிருத்திக்கின் தந்தை பன்னீர்செல்வம், பாத்திமாபானுவின் கணவர் பிரபாகரன், சந்திராவின் கணவர் செல்வராஜ் ஆகியோரும் சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்கக்கோரியும் பாஜக மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுக்கள் அனைத்தும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணை குழுவில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள். எனினும் அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சிபிஐ நடத்தும் விசாரணையை மாதம்தோறு இந்த குழுவிடம் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து சிபிஐ கோரிய மனுத் தாக்கலில் மிகப்பெரிய மோசடியை உச்ச நீதிமன்ற கருத்தில் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் முறையிடப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மோசடியாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது, உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதனை கருத்தில் கொள்வோம் என நீதிபதி அமர்வு தெரிவித்தது. மேலும், மனுத்தாக்கலில் மோசடி நடந்திருந்தால் அதையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிடுவோம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.