இன்று கார்த்திகை விரதம் தொடக்கம், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் எதிரொலி சென்னை காசிமேட்டில் அதிகாலையில் மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்
* கடந்த வாரத்தை விட விலை அதிகமாக இருந்த போதிலும் வாங்கி சென்றனர்
சென்னை: கார்த்திகை விரதம் இன்று தொடக்கம், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நேற்று சென்னை காசிமேட்டில் மீன் வாங்க அதிகாலையில் அசைவ பிரியர்கள் குவிந்தனர். கடந்த வாரத்தை விட விலை அதிகரித்த போதிலும் வாங்கி சென்றனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விற்கப்படும் மீன்கள் பிரஷ்ஷாகவும், சுவையாகவும் இருக்கும் என்பதாலும், விலை குறைவாக இருக்கும் என்பதால் வார விடுமுறை நாட்களில் இங்கு அதிகாலை முதல் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
சென்னை மட்டுமின்றி பக்கத்து மாவட்டத்தில் இருந்தும் வியாபாரிகள், பொதுமக்கள் அதிக அளவில் வருவது உண்டு. அந்த வகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம். அதே நேரத்தில் கார்த்திகை மாதம் இன்று முதல் தொடங்க உள்ளது. கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்ப சுவாமியை வேண்டி மண்டல பூஜைக்காக மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவது வழக்கம். இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் கோவிலில், மாலை அணிவித்து விரதத்தை தொடங்குவார்கள். விரதம் நாட்களில் அசைவ உணவுகளை தவிர்ப்பது வழக்கம்.
இந்த நிலையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். இதனால் அதிகாலை முதல் மக்கள் அதிக அளவில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வாங்க வரத் தொடங்கினர். மக்கள் வரத்தால் காசிமேடு மீன் சந்தை பரபரப்பாக காணப்பட்டது. மீன்களை வாங்க சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஏராளமான அசைவ பிரியர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், மொத்த வியாபாரிகள், மீன்களை ஏல முறையில் வாங்கிச் சென்றனர்.
அது மட்டுமல்லாமல் இருண்ட வானிலை குளிர்ந்த சூழ்நிலை நிலவியதால் பொதுமக்களும் ஏராளமானோர் காசிமேடு மீன் சந்தையில் படை எடுத்தனர். இதனால் அதிகாலை முதலே திருவிழா போன்று மக்கள் கூட்டம் காணப்பட்டது. நடக்கக்கூட இடமில்லாமல் மக்கள் மீன்களை ஏலம் எடுத்து வாங்கி சென்றனர். விசைப்படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்கள் உடனடியாக ஏலம் முறையில் கூடை, கூடையாக விற்பனை செய்யப்பட்டது.
அதே நேரத்தில் மீன் விலை கடந்த வாரத்தை விட அதிக விலைக்கு விற்பனையானது. விலை அதிகமாக இருந்த போதிலும், அதனை பொருட்படுத்தாமல் மீன்களை அசைவ பிரியர்கள் வாங்கி சென்றனர். நேற்று வஞ்சிரம்(முதல் தரம்) ரூ.1300 ரூபாய் முதல் ரூ.3500 வரை விற்பனையானது. கொடுவா ரூ.800லிருந்து ரூ.900, சீலா ரூ.600, பால் சுறா ரூ.500லிருந்து ரூ.600, கருப்பு வவ்வால் ரூ.1000லிருந்து ரூ.1200, வெள்ளை வவ்வால் ரூ.1000லிருந்து ரூ.1500, நாக்கு மீன் ரூ.700லிருந்து ரூ.900, சங்கரா ரூ.600க்கும் விற்கப்பட்டது.
பாறை ரூ.500லிருந்து ரூ.800, இறால் ரூ.500லிருந்து ரூ.600, நண்டு ரூ.500லிருந்து ரூ.600, நவரை ரூ.400, பன்னா ரூ.400லிருந்து ரூ.500, காணங்கத்தை ரூ.300லிருந்து ரூ.400, கடமா ரூ.400லிருந்து ரூ.550, நெத்திலி ரூ.300லிருந்து ரூ.450, டைகர் இறால் ரூ.1300லிருந்து ரூ.2000த்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. மக்கள் தங்கள் தேவைக்கேற்ப விருப்பத்திற்கு பேரம் பேசி மீன்களை வாங்கி சென்றனர்.