கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ வெற்றி செல்லாது: மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
பெங்களூரு; கோலார் மாவட்டம் மாலூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.ஒய்.சஞ்சேகவுடாவின் வெற்றி செல்லாது என்று அறிவித்துள்ள கர்நாடக உயர்நீதிமன்றம் 4 வாரத்திற்குள் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவை அறிவிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் கோலார் தொகுதி மாலூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.ஒய்.நஞ்சேகவுடா வெற்றி பெற்றார்.
அவரிடம் தோல்வியை தழுவிய பாஜ வேட்பாளர் மஞ்சுநாத் கவுடா, நஞ்சேகவுடாவின் வெற்றியை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நஞ்சேகவுடா வெறும் 248 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். வாக்கு வித்தியாசம் மிகக்குறைவாக இருந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்ததாகக் கூறி, வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மஞ்சுநாத் கவுடா மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.தேவதாஸ், மாலூர் தொகுதி எம்.எல்.ஏவாக நஞ்சேகவுடா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அறிவித்ததுடன், 4 வாரங்களுக்குள் மீண்டும் வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடித்து அறிவிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார். உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பால் எம்.எல்.ஏ நஞ்சேகவுடாவும், காங்கிரஸ் கட்சியும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
நஞ்சேகவுடா தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்று, இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக ஐகோர்ட் அனுமதித்தது. எனவே நஞ்சேகவுடா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உத்தரவை பெற வேண்டும். இல்லாவிட்டால், மாலூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ நஞ்சேகவுடா எம்.எல்.ஏ பதவியை இழக்க நேரிடும்.