தமிழ்நாட்டை போல கர்நாடகாவிலும் இருமொழி கல்வி மட்டுமே அவசியம்: மாநில அரசுக்கு கல்வி சீர்திருத்த ஆணையம் சிபாரிசு
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் சீரான கல்வி வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால், தற்போதுள்ள மும்மொழி கல்வி கொள்கைக்கு பதிலாக இருமொழி கல்வி கொள்கை செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு கர்நாடக கல்வி சீர்திருத்த ஆணையம் சிபாரிசு செய்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழி கொள்கை மட்டும் தான் கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதே போல் கர்நாடகாவிலும் இருமொழிக்கொள்கையை மட்டும் கடைபிடிக்க மாநில அரசுக்கு கல்வி சீர்திருத்த ஆணையம் சிபாரிசு செய்துள்ளது. அதன்விவரம் வருமாறு: கர்நாடகாவில் கல்வி துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை கொடுப்பதற்காக பேராசிரியர் சுக்தேவ் தோராட் தலைமையில் கர்நாடக கல்வி சீர்திருத்த ஆணையத்தை கடந்த 2023 அக்டோபர் 11ம் தேதி மாநில அரசு அமைத்தது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல்வர் சித்தராமையா மற்றும் துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோரிடம் இறுதி அறிக்கையை ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் சுக்தேவ் தோராட் வழங்கினார்.
கல்வி சீர்திருத்த ஆணையம் வழங்கியுள்ள சிபாரிசில், ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை கன்னடம் தாய்மொழியாக கற்பிக்க வேண்டும். முக்கிய சிபாரிசாக மாநிலத்தில் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு தற்போதுள்ள மும்மொழி கல்வி கொள்கையை தவிர்த்து கன்னடம்,ஆங்கிலம் ஆகிய இருமொழி கல்வி கொள்கை செயல்படுத்த வேண்டும். மாநில அரசு பள்ளிகளின் கல்வி தரம் கேந்திரிய வித்யாலயாக்களின் தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை செய்துள்ளது.