2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வாக்குத்திருட்டு முயற்சி: வாக்காளர்களை நீக்க போலியாக விண்ணப்பித்தது அம்பலம்
பெங்களூரு: தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குதிருட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டப்படும் நிலையில், 2023 கர்நாடக சட்டமன்ற தேர்தலின் போதே, பல ஆயிரம் வாக்காளர்களை நீக்க முயற்சி நடந்ததை பற்றி திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கின்றனர். கர்நாடக சிஐடி கேட்ட விவரங்களை தேர்தல் ஆணையம் தராததால் இதுகுறித்து விசாரணை 2 ஆண்டுகளுக்கு மேலாக முடங்கி இருப்பது தெரியவந்து இருக்கிறது. 2023 கார்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே, ஆலந்த் சட்டமன்றத் தொகுதியில் 6,018 வாக்காளர்களை நீக்க Form 7 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதில் வெறும் 24 விண்ணப்பங்கள் மட்டுமே உண்மையானவை என்றும், எஞ்சியுள்ள 5,994 விண்ணப்பங்கள் போலியானவை என்றும், வாக்காளர்களுக்கே தெரியாமல் அவர்களை நீக்க Form 7 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளதும் அம்பலமாகி உள்ளது. 2023ல் காங்கிரஸ்கரரான தனது சகோதரர் பெயரை நீக்க விண்ணப்பம் வந்ததை அறிந்து ஒரு வாக்குச்சாவடி அதிகாரி பெயர் நீக்கம் முறைகேடு குறித்து எச்சரித்தார். இதையடுத்து ஆலந்த் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான பி.ஆர். பாட்டீல் முறைகேட்டை அம்பலப்படுத்தினார். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சிஐடி விசாரணைக்கு காங்கிரஸ் அரசு உத்தரவிட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட சிஐடி, இது நன்கு திட்டமிடப்பட்ட மோசடி என கூறியுள்ளது.
பெயர் நீக்கத்திற்காக விண்ணப்பித்தவர்களிடம் விசாரித்த போது அவர்கள், தாங்கள் அப்படி எதுவும் விண்ணப்பிக்கவில்லை என அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். தனித்தனியாக மட்டுமின்றி பலரது குடும்பங்களில் உள்ள ஒட்டுமொத்த வாக்காளர்கள் பெயர்களையும் நீக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் வேறொரு வாக்காளரின் பெயரில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அப்படி விண்ணப்பித்தவர்களிடம் விசாரித்த போது, தாங்கள் யார் பெயரையும் நீக்க விண்ணப்பிக்கவில்லை என்றும், விண்ணப்பத்தில் உள்ள செல்போன் எண் தங்களுடையது இல்லை என்றும் தெரிவித்தனர். விண்ணப்பங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் NVSP இணையத்தளம் மற்றும் கருடா செயலி மூலமாகவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல விண்ணப்பிக்கப்பட்ட செல்போன் எண்கள் மகாராஷ்டிரா, ஆந்திராவை சேர்ந்தவை என்று தெரியவந்தன. மேலும், தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்திலோ, செயலியிலோ தங்கள் பதிவு செய்யவில்லை என செல்போன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலும் இணையத்தை பயன்படுத்தவே தெரியாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து விண்ணப்பம் அளித்தது யார்? எங்கிருந்து பெறப்பட்டது?. ஐபி முகவரி உள்ளிட்டவற்றை தேர்தல் ஆணையத்திடம் சிஐடி கோரியது. தேர்தல் ஆணையம் அளித்த தரவுகளை ஆராய்ந்தபோது போலி வாக்காளர் நீக்க விண்ணப்பம் செய்தவர்கள் டைனமிக் ஐபி-களை பயன்படுத்தியது தெரியவந்தது.
டைனமிக் ஐபி மூலம் விண்ணப்பித்தவர்களை கண்டறிவது மிக கடினம் என்பதால் விண்ணப்பங்கள் சென்று தேர்தல் ஆணையத்துக்கு வந்து சேர்ந்த கணினி முகவரி விவரங்களை கேட்டு தேர்தல் ஆணையத்துக்கு சிஐடி 12 முறை கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், இதுநாள் வரையில் கோரிய தரவுகளை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. ஓடிபி இல்லாமல் விண்ணப்பிக்கும் முறை குறித்து கேள்விக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் மவுனத்தால் பல்லாயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் நீக்க குறித்த விசாரணை இரண்டரை ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. பீகார் வாக்குத்திருட்டு சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ள சூழலில், கர்நாடக போலி வாக்காளர் நீக்க சர்ச்சை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.