கரியமலையில் மழையில் இடிந்து விழுந்த தடுப்புச் சுவர் ரூ.8 லட்சத்தில் சீரமைப்பு பணிகள் துவக்கம்
மஞ்சூர் : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கரியமலை. கீழ்குந்தா பேரூராட்சிக்குட்பட்ட 4வது வார்டான இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் பெய்த பலத்த மழையில் குடியிருப்புகள் அருகே மைதானத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த நடைபாதை தடுப்பு சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இந்நிலையில், தடுப்பு சுவர் இடிந்து விழுந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கிராம மக்கள் கடும் அதிருப்தி அடைந்தார்கள்.
இடிந்து விழுந்த தடுப்பு சுவரை ஒட்டி ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில் குடியிருப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டதுடன் சமீபகாலமாக இப்பகுதியில் அடிக்கடி பெய்து வரும் மழையால் மேலும் மண் சரிவுகள் ஏற்பட்டு வந்தது.
இதை தொடர்ந்து இடிந்து விழுந்த தடுப்பு சுவரை சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். இதை தொடர்ந்து கீழ்குந்தா பேரூராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு 15வது நிதிகுழு திட்டத்தின் மூலம் ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.